துபாயில் நிர்வாணமாக படம் எடுத்து வெளியிட்டதாக 11 இளம் பெண்கள் உள்பட 12 பேர் கைது

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (12:48 IST)
துபாயில் பொது வெளியில் நிர்வாண படப்பிடிப்பு நடத்தியதற்காக பெண்கள் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குழு, பால்கனியில் நிர்வாணமாக நின்றபடி படம் எடுத்தது, கடந்த சனிக்கிழமை இணையத்தில் வெளியான ஒரு காணொளியில் தெரிந்தது.

இந்த நிர்வாணப் படப்பிடிப்பு பற்றி அறிந்த அதிகாரிகள், அப்பெண்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 11 பெண்களும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என உக்ரைன் நாட்டின் துணைத் தூதரகம் பிபிசியிடம் கூறியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் என ரஷ்ய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில், பொதுவெளியில் நிர்வாணமாக இருப்பது தண்டனைக்குரிய குற்றம். இதற்கு 6 மாத காலம் வரை சிறை தண்டணையும், 5,000 திராம் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அமீரகத்தில் இருக்கும் பல சட்டங்களும் ஷரியா விதிகளை அடிப்படையாகக் கொண்டவை.

இதற்கு முன்பும், விடுமுறைக்கு வந்த வெளிநாட்டவர்கள், பொதுவெளியில் தங்கள் அன்பை உடல் ரீதியில் வெளிப்படுத்தியதற்கு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தற்போது பால்கனியில் இருந்தபடி நிர்வாணப் படம் பிடித்த சம்பவம் துபாயின் மெரினா மாவட்டத்தில் நடந்துள்ளது.

கைதான 11 பெண்களையும் இன்று (06.04.2021 செவ்வாய்கிழமை) சந்தித்துப் பேச இருப்பதாக உக்ரைன் துணைத் தூதரகம் கூறியுள்ளது.

இந்த படப்பிடிப்பை ஏற்பாடு செய்த ஒரு ரஷ்யரும் கைது செய்யப்பட்டிருப்பதாக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ரியா செய்தி முகமை கூறியுள்ளது. அவர் 18 மாத கால சிறை வாசத்தை எதிர்கொள்கிறார் எனவும் அம்முகமை குறிப்பிட்டுள்ளது.

ஆபாசப் படங்களை வெளியிடுவதோ அல்லது பொது வெளியில் நன்னடத்தைக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் எதையாவது பதிவிடுவதோ சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கத்தக்க குற்றங்கள் என துபாய் காவலர்கள் எச்சரித்துள்ளனர்.

அது போன்ற ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கைகள் அமீரக சமூகத்தின் மதிப்பையும், நெறிமுறைகளையும் பிரதிபலிக்காது" என காவலர்கள் வெளியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வருபவர்கள் அல்லது அந்நாட்டில் வாழ்பவர்கள், அந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்கள். இதில் சுற்றுலா பயணிகளும் அடக்கம். இதற்கு முன்பும் இப்படி சில வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த 2017-ம் ஆண்டு, ஒரு பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பெண்மணி, தான் திருமணம் செய்து கொள்ளாத ஒருவரோடு, இரு தரப்பு சம்மதத்துடன் உடலுறவு கொண்டதற்காக, ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்பெண்ணோடு உடலுறவு கொண்ட ஆண், தன்னை பயமுறுத்தும் விதத்தில் குறுஞ்செய்திகளை அனுப்புகிறார் என அதிகாரிகளிடம் புகாரளித்த போதுதான் இந்த விவகாரம் வெளியே தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்