இலங்கை: போலீஸ் தாக்குதலில் ஒருவர் பலி- போராட்டங்கள் தொடர காரணம் என்ன?

திங்கள், 27 பிப்ரவரி 2023 (23:56 IST)
ஆட்சியிலிருந்து ராஜபக்ஷ குடும்பம் வெளியேறி, புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள பின்னணியிலும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
 
ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஆட்சி பீடம் ஏறியமைக்கு எதிராக இந்த போராட்டங்கள் இன்றும் தொடர்ந்த வண்ணம் இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
 
நாட்டில் நடத்தப்படும் போராட்டங்களில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் போலீஸார் தாக்குதல் நடத்துவது வழமையாக இடம்பெறும் சம்பவமாக காணப்படுகின்றது.
 
தேசிய மக்கள் சக்தி போராட்டம்
 
கொழும்பில் நேற்றைய தினம் தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தை கலைப்பதற்கு போலீஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.
 
போலீஸாரால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தினால் நேற்றைய தினம் 28 பேர் காயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
 
இவ்வாறு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
 
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நிவிதிகல பிரதேச சபையின் வேட்பாளராக களமிறங்கிய நிமல் அமரசிறி என்பரே உயிரிழந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
நேற்றைய போராட்டத்தில் காயமடைந்த 28 பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததாகவும், அவர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
 
''மிகவும் மோசமான விதத்தில் மிலேச்சதனமாக தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டத்தில் இருந்த நாம் எவரும் மோதல்களுக்கு செல்லவில்லை. அப்படி இருந்த போதிலும், அமைதியான முறையில் போராட்டத்தை நடத்திய சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலினால் 28 பேர் வரை அந்த சந்தர்ப்பத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியிருந்தனர்.
 
மேலும் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியிருக்கிறது. நிவித்திகல பகுதியைச் சேர்ந்த நிமல் அமரசிறி என்பவரே உயிரிழந்துள்ளார். அமைதியான போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி, மனித உயிர்களுடன் விளையாடுவது மிகவும் பாரதூரமான விடயம் என நாம் நினைக்கின்றோம்" என தேசிய மக்கள் சக்தியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
 
மனித உரிமை ஆணைக்குழு விசாரணை
 
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட போராட்டத்தின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் நடத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
 
இந்த சம்பவத்தில் 28 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில், 24 மணித்தியாலங்களுக்குள் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, போலீஸ் மாஅதிபரிடம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது.
 
இந்த போராட்டம் கொம்பனிவீதி போலீஸ் அதிகாரத்திற்குட்பட்ட யூனியன் பிளேஸ் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில், அங்கு நீதிமன்ற தடையுத்தரவொன்று இல்லாத பின்னணியில், கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் நடத்தப்பட்டமை குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்திருந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் போராட்டங்களை ஆரம்பித்திருந்தார்கள்.
 
நுகேகொடை பகுதியிலுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட்டு அன்றைய தினம் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், முதல் தடவையாக கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் போலீஸாரினால் நடத்தப்பட்டது.
 
மின்சார தடை, அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, எரிவாயு விலையேற்றம் என பல்வேறு அசௌகரியங்களை சந்தித்த மக்கள், அரசாங்கத்திற்கு எதிராக அப்போது வீதிக்கு இறங்கி போராட்டங்களை நடத்தினார்கள்.
 
அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் 09ம் தேதி கொழும்பு - காலி முகத்திடலுக்கு தன்னெழுச்சியாக ஒன்று கூடிய மக்கள், தொடர் போராட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள்.
 
ஏப்ரல் 09ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் சுமார் 100 நாட்களில் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது.
 
குறிப்பாக மே மாதம் 09ம் தேதி ராஜபக்ஷ ஆதரவாளர்கள், காலி முகத்திடலுக்குள் பிரவேசித்து, தன்னெழுச்சி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, நாடு முழுவதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
 

 
இந்த வன்முறைகளில் 10ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருந்தார்கள். அதேபோன்று, பல கோடி ரூபா பெறுமதியாக சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.
 
அந்த சம்பவத்தை அடுத்து, அப்போதைய பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து, அப்போதைய அமைச்சரவையும் முழுமையாக பதவி விலகியது.
 
இதையடுத்து, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ரணில் விக்ரமசிங்க பிரதமராக மே மாதம் 12ம் தேதி நியமிக்கப்பட்டார்.
 
அதனைத் தொடர்ந்து, ஜுன் மாதம் 09ம் தேதி, ராஜபக்ஷ குடும்பத்தின் முக்கிய நபரான பஷில் ராஜபக்ஷ, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
 
இவ்வாறு தொடர்ந்த போராட்டம், ஜுலை மாதம் 09ம் தேதி வலுப் பெற்ற நிலையில், கொழும்பு நகருக்குள் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து விரட்டியிருந்தனர்.
 
ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் மாளிகை (அலரிமாளிகை), பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் தம்வசப்படுத்தியிருந்தனர்.
 
 
மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக, மாலைதீவு நோக்கி பயணித்து, அங்கிருந்து சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து தாய்லாந்து நோக்கி பயணித்திருந்தார்.
 
சிங்கப்பூர் நோக்கி பயணித்த கோட்டாபய ராஜபக்ஷ, சபாநாயகருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருந்தார்.
 
கோட்டாபய ராஜபக்ஷ, தனது ராஜினாமாவை அறிவித்த நிலையில், பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக ஜுலை மாதம் 15ம் தேதி நியமிக்கப்பட்டார்.
 
அதன்பின்னர், நாடாளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக ஜுலை மாதம் 21ம் தேதி நியமிக்கப்பட்டிருந்தார்.
 
ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க, ஜுலை மாதம் 22ம் தேதி இரவு, ஜனாதிபதி செயலகத்தை அண்மித்து, தொடர் போராட்டத்திலிருந்த போராட்டக்காரர்களை பாதுகாப்பு பிரிவினரை பயன்படுத்தி, தாக்குதல் நடத்தி கலைத்திருந்தார்.
 
அதன்பின்னர், காலி முகத்திடல் போராட்டம் படிப்படியாக வலுவிழந்து, அங்கிருந்து போராட்டக்காரர்கள் அனைவரும் வெளியேறியிருந்தனர்.
 
இவ்வாறான நிலையில், பொருளாதார பிரச்னைகள் தொடர்கின்ற பின்னணியில், இலங்கையில் நாளாந்தம் ஏதோ ஒரு போராட்டம் இடம்பெற்று வருவதை காண முடிகின்றது.
 
வரி அதிகரிப்பு, தேர்தல் ஒத்தி வைப்பு, மின்சார கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி, அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருகின்றன.
 
இவ்வாறு நடத்தப்படும் போராட்டங்களில் மீது போலீஸார் பல்வேறு தருணத்தில் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகங்களை நடத்தி கலைத்து வருகின்றார்கள்.
 
மருத்துவர்கள், ஆசிரியர்கள், துறைமுக ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், மின்சார சபை ஊழியர்கள் என அரச துறை சார் தொழிற்சங்கங்கள் இந்த போராட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றன.
 
மறுபுறத்தில் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளும் போராட்டங்களை அவ்வப்போது நடத்தி வருவதை காண முடிகின்றது.
 
தமக்கான பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டு வரப்படாத பட்சத்தில், நாடு தழுவிய ரீதியில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராகி வருவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்