புல்வாமா தாக்குதல்: ஓராண்டில் நிகழ்ந்த மாற்றங்கள் என்னென்ன?

வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (13:22 IST)

2019 பிப்ரவரி 14 ஆம் தேதி பிற்பகல் 3.10 மணி வரையில் , லாடூமோட் என்பது தெற்கு காஷ்மீரில் உள்ள ஓர் இடம். அவ்வளவுதான்.

 
அடுத்த நிமிடம் அது மாறிவிட்டது. நிரந்தரமாக மாறிவிட்டது.
 
மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.) வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது, வெடிபொருட்கள் நிரப்பிய மாருதி சுசுகி ஈக்கோ வாகனத்தை தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன் மோதச் செய்து 40 வீரர்களைக் கொன்ற இடமாக லாடுமோட் மாறியது.
 
மூன்று தசாப்த காலங்களில் நடந்த பயங்கரவாத செயல்களில், இதுபோன்ற பயங்கரமான சம்பவம் இதுவரை நடந்தது கிடையாது.
 
சி.ஆர்.பி.எஃப். பொருத்த வரையில், இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் சண்டையை எதிர்கொள்வதோ அல்லது தங்கள் வாகனங்கள் மீது தாக்குதல் நடப்பதோ புதிது அல்ல.
 
ஆனால் அதுபோன்ற தாக்குதல் மறுபடி நடக்காத வகையில் எந்த அளவுக்கு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன?
 
``எதிரிகளின் கொடூரமான திட்டங்களை எதிர்கொள்ளும் வகையில் மட்டுமின்றி, தீவிரவாதிகள் உருவாகும் சூழ்நிலையை அழிக்கும் வகையிலும் தேவையான சாதனங்கள் வாங்குவது மற்றும் உத்திகளை உருவாக்குவது என சிஆர்பிஎப் தொடர்ந்து சீர்திருத்தங்களைச் செய்து கொண்டே இருக்கிறது'' என்று சிஆர்பிஎப் டைரக்டர் ஜெனரல் ஆனந்த் பிரகாஷ் மகேஸ்வரி பிபிசியிடம் தெரிவித்தார்.
 
கடந்த ஆண்டு நடந்த தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை பற்றியும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பற்றியும் கேட்டதற்கு, அவர் பதில் அளிக்கவில்லை.
 
தாக்குதலை தடுத்திருக்கக் கூடிய அளவில் தகவல் சேகரிக்க முடியாமல் போன, புலனாய்வுத் துறையின் தோல்வி பற்றியும், வீரர்கள் சென்ற வாகனங்களுக்குப் பாதுகாப்பு அளித்ததில் இருந்த குறைபாடுகள் பற்றியும் கடந்த ஆண்டு கேள்விகள் எழுப்பப்பட்டன.
 
அந்த தற்கொலைப் படை தாக்குதலைத் தொடர்ந்து சிஆர்பிஎஃப் பிரிவில் தலைகள் எதுவும் உருளவில்லை என்று அதன் பல அதிகாரிகள் பிபிசியிடம் உறுதிப்படுத்தினர்.
 
``புல்வாமா தாக்குதல் என்பது ஏதோ குறைபாடு காரணமாக நடந்தது அல்ல. எனவே யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கும் அவசியம் இல்லை. எந்த வகையிலான தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில் நாங்கள் அன்றைய தினம் பயிற்சி பெற்றிருந்தோம். ஆனால் வெடிபொருள்கள் ஏற்றிய வாகனத்தில் வரும் தாக்குதலை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கவில்லை. படிக்காத பாடத்தில் இருந்து தேர்வில் கேள்வி வருவதைப் போல இது உள்ளது'' என்று தன் பெயரை தெரிவிக்க விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
 
இருந்தபோதிலும், தீவிரவாதிகள் வாகனங்களையே வெடிகுண்டுகளாக பயன்படுத்தியது இது முதல்முறை அல்ல என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
2005ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி நவ்கம் என்ற இடத்தில் தீவிரவாதி ஒருவர் வெடிபொருள் நிரப்பிய தனது காரை மோதி வெடிக்கச் செய்ததில் காவல் துறையினர் 3 பேரும், பொது மக்கள் ஆறு பேரும் கொல்லப்பட்டனர் என்று தெற்காசிய தீவிரவாதச் செயல்கள் குறித்த இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு சமயங்களிலும் வாகனங்கள் கார் வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.
 
சிஆர்பிஎஃப் ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் ஜெனரல் வி.பி.எஸ். பன்வரிடம் பிபிசி இதுபற்றிக் கேட்டது. ``சிஆர்பிஎஃப் என்பது அதிரடி தாக்குதலுக்கான படை. ஒரு பிரச்சனை முடிந்ததும் அடுத்த பிரச்சினையை கையாள சென்றுவிடும். என்னைப் பொருத்த வரையில், புல்வாமா சம்பவம் ஒரு பெரிய தவறு என்று நினைக்கிறேன். அதில் இருந்து சிஆர்பிஎப் எவ்வளவு விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளது என்று எனக்குத் தெரியவில்லை'' என்று அவர் கூறினார்.
 
இதற்கிடையில், உறுதியான நடவடிக்கைகள் என்று பார்த்தால், பாதுகாப்புத் துறை வாகனங்கள் செல்லும்போது நெடுஞ்சாலையில் பொது மக்கள் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
 
அதிக எண்ணிக்கையிலான வீரர்களை விமானம் மூலம் அனுப்பி வைத்திருக்கும் வாய்ப்பு இருந்த நிலையில், அதிக வாகனங்களில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகமாக உள்ள பாதையில் செல்லும் நிலையை உருவாக்கியதற்காக அரசு மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
 
இப்போது அது மாறிவிட்டது.
 
``ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே சிஆர்பிஎஃப் வீரர்களை விமானம் மூலம் அனுப்புவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இப்போது வீரர்கள் தனியார் விமானத்தில் கூட பயணம் சென்றுவிட்டு, அதற்கான செலவை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்'' என்று சிஆர்பிஎப்-ல் உள்ள பெயர் தெரிவிக்க விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வரையிலான பாதை முழுக்க கண்காணிப்பதற்கு சிசிடிவி பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அது தயாரானதும், வாகனங்கள் செல்வதை நேரடியாக கண்காணிக்க முடியும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக கண்காணிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனங்கள் செல்லும்போது, சாலைப் பாதையில் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதற்காக, அந்தப் பாதையில் நிறுத்தியிருக்கும் லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் அகற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
தாக்குதல் குறித்த விசாரணையைப் பொருத்த வரையில், கண்டறியப்பட்ட விஷயங்களை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையாக சமர்ப்பித்துள்ளது. அது இன்னும் முறைப்படி தாக்கல் செய்யப்படவில்லை.
 
இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 20 ஆம் தேதி தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) ஏற்றுக்கொண்டது.
 
தற்கொலைப் படை தீவிரவாதி பயன்படுத்திய வாகனத்தின் உரிமையாளரையும், பயன்படுத்தப்பட்ட வெடி மருந்தின் தன்மையையும் கண்டறிந்திருப்பது `தாக்குதலின் சதியை கண்டுபிடித்துவிட்ட செயல்' என்று என்ஐஏ கூறுகிறது. செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு என்ஐஏ அளித்த பதிலில் இதுவே பெரிய வெற்றி என கூறப்பட்டுள்ளது.
 
``தாக்குதல் நடந்த உடனேயே இதற்கு தாங்கள் தான் காரணம் என ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் முகமது ஹாசன் கூறிய தகவல் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது. அவர் பயன்படுத்திய இன்டர்நெட் தொடர்பின் ஆதாரத்தை தேடியதில், அதன் ஐ.பி. முகவரி பாகிஸ்தானில் இருப்பது தெரிய வந்தது. புல்வாமா வழக்கை விசாரிக்கும்போது, ஜெய்ஷ் இ முகமது-ன் மற்றொரு குழுவின் செயல்பாடும் கண்டறியப்பட்டு, அதன் ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் இதுவரை சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது-ன் அடிப்படை ஆதாரத்தை உடைப்பதாக இந்த நடவடிக்கை இருந்தது'' என்று என்.ஐ.ஏ. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
புல்வாமா சம்பவம் தொடர்பாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாதது பற்றி குறிப்பிட்டுக் கேட்டதற்கு, ``மேலே குறிப்பிடப்பட்ட காரணங்களால் குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை'' என்று என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்