பில்கிஸ் பானு: "எனக்கு குஜராத்திலேயே நீதி கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்"

சனி, 27 ஏப்ரல் 2019 (15:33 IST)
எனக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், அதற்காக நான் முன்னெடுத்த போராட்டத்தையும் நீதிமன்றம் உணர்ந்ததை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த விவகாரத்தில் எனக்கு ஆதரவாக நின்ற நீதிமன்றத்துக்கும், மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது கிடைத்துள்ள நீதியை எனது சொந்த மாநிலமான குஜராத்திலேயே பெற்றிருந்தால் நான் மென்மேலும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
 
நான் ஒரு குஜராத்தி, குஜராத்தின் மகள். குஜராத்தியை பேசுவதை போன்று என்னால் இந்தி மொழியில் சரளமாக பேச முடியாது. ஆனால், எனது சொந்த மாநிலத்தில் நான் அச்சத்துடன் வாழ்ந்தபோது, எனது மாநில அரசாங்கம் ஆதரவுக்கரம் நீட்டாதது என்னை துயரத்தில் ஆழ்த்துகிறது.
 
நான் பள்ளியின் வாசற்படியை கூட மிதித்ததில்லை. அந்த காலத்தில் பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள்.
 
நான் குழந்தையாக இருக்கும்போது, மிகவும் அமைதியான சுபாவத்தை கொண்டிருந்தேன். இளமை காலத்தில் தலையை அழகாக வாரிக்கொண்டு, கண்களில் மை இடுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால், கடந்த 17 ஆண்டுகளாக எனது இளமைக்கால நினைவுகளை மீட்டெடுப்பதற்கு கூட நான் மிகவும் கடினமாக உணருகிறேன்.
 
என்னுடைய தாய், தந்தை, சகோதரிகள், சகோதரர்கள் என அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம்.
 
எனக்கு திருமணமானதும் நாங்கள் அனைவருடன் ஒன்றாக இணைந்து வாழவே விரும்பினோம். வாழ்க்கையில் முன்னேற்றமடைவதற்கு தேவையான முயற்சிகளை நாங்கள் எடுத்து வந்தோம். அந்த நிலையில்தான், எங்களது அனைத்து செயல்பாடுகளையும் முடக்கும் வகையிலான மோசமான சம்பவம் 2002ஆம் ஆண்டு நடந்தது.
 
அந்த சம்பவத்தின்போது, என் குடும்பத்தை சேர்ந்த 14 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன், அப்போது கர்ப்பமாக இருந்த நான் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டேன். நான் எவ்வளவோ கெஞ்சியும், கதறியும் கூட அவர்கள் என்னை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தனர். அதுமட்டுமின்றி, என்னுடைய அருமை மகள் சலேஹா என் கண்ணெதிரே கொலை செய்யப்பட்டார்.
 
அப்போது ஏற்பட்ட துயரத்தை என்னால் வார்த்தையால் விவரிக்க முடியாது. சலேஹா எங்களது முதல் குழந்தை. எங்களது மத வழக்கப்படி, எங்களது மகளுக்கு இறுதி சடங்கை கூட எங்களால் செய்ய முடியவில்லை.
 
எனது குழந்தையின் ஆத்மா சாந்தி அடைவதற்கு, அஞ்சலி செலுத்துவதற்கு கூட கல்லறையை அமைக்க முடியவில்லை. இந்த சம்பவத்தால் எங்களது குடும்பம் அடியோடு பாதிக்கப்பட்டது.
 
அதன் பிறகு, எங்களது வாழ்க்கையில் அடுத்த நிலையை நோக்கி அடியெடுத்து வைக்க முடியாமல் 17 ஆண்டுகளாக தவித்து வருகிறோம்.
 
இந்த சம்பவம் நடப்பதற்கு முன்புவரை, நான் ரயில்கள் தண்டவாளத்தில் ஓடியதை தூரத்திலிருந்து பார்த்திருக்கிறேனே தவிர, பெரிய ரயில் நிலையங்களுக்கு சென்றதில்லை.
 
கோத்ரா ரயில் நிலையத்தில் இந்த மோசமான சம்பவம் நடந்தேறியபோது, நான் எனது கணவருடன் அங்கு சென்றிருந்தேன். ஆனால், இதுபோன்ற மோசமான நாளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை.
 
எங்களது குடும்பத்தை சேர்ந்த 14 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது என்னையும், எனது கணவரையும் கடுமையாக பாதித்தது. ஆனால், அந்த வலியை அனுபவிப்பதற்காக நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பிற்காலத்தில் எங்களுக்கு போராடும் வலிமையை அளித்தது.
 
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு வரை நாங்கள் அடிக்கடி திரைப்படம் பார்ப்போம். ஆனால், கடந்த 17 ஆண்டுகளில் நாங்கள் ஒரு படம் கூட பார்க்கவில்லை.
 
கடந்த 17 ஆண்டுகளில் கிடைத்த ஒரே நிவாரணம் என்னவென்றால், எங்கள் இருவரிடையே வேறுபாடு ஒன்றுமில்லை.
 
இத்தனை ஆண்டுகளாக, எங்கள் நலன் விரும்பிகள் உள்பட பல்வேறு தரப்பினரும், எனது கணவரை இந்த நீண்ட சட்டப் போராட்டத்தை விடுத்து, வாழ்வாதாரத்திற்காக உழைக்க வேண்டுமென்று வலியுறுத்தி வந்தனர்.
 
சில நேரங்களில் மற்றவர்கள் சொல்வது சரி என்றே நாங்களும் கருதினோம். ஆனால், நாங்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் இயல்பு வாழ்க்கையை வாழ்வதைவிட மிகவும் முக்கியமானது என்று உணர்ந்ததால் நானும் எனது கணவரும் அதை ஒருபோதும் கைவிடவில்லை.
 
எப்போதெல்லாம் இதிலிருந்து பின்வாங்குவதற்கான சிந்தனை எங்களது மனதை கடந்து சென்றாலும், அப்போதெல்லாம் எங்களது மனசாட்சி அதை தடுத்து நிறுத்தும்.
 
இந்த 17 ஆண்டுகால போராட்டத்தில் நாங்கள் பல சிரமங்களை எதிர்கொண்டோம். ஆனால் சமுதாயம், பெண் உரிமைக் குழுக்கள், சிபிஐ, மனித உரிமைகள் ஆணையம், சிவில் சமூகம் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் எங்களுக்கு உதவினார்கள்.
 
நாங்கள் நீதிக்காக 17 ஆண்டுகளாக போராடினாலும், எனது கணவரும் நானும் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு மீது வைத்திருந்த நம்பிக்கையை இழக்கவில்லை. ஒருநாள் எங்களுக்கு கட்டாயம் நியாயம் கிடைக்கும் என்று நம்பினோம். அந்த நாள் வந்துவிட்டதாக நான் கருதுகிறேன்.
 
தற்போது எனக்கு வேண்டுமானால் நீதி கிடைத்திருக்கலாம். ஆனால், எனது குடும்பத்தை சேர்ந்த 14 பேரை இழந்ததை என்னால் மறக்கவே முடியாது. ஒரு நாளின் காலை நேரம் முழுவதும், ஏதாவதொரு வேலையில் என்னை நானே தீவிரமாக ஈடுபடுத்தி கொண்டாலும், அன்றைய இரவு அந்த கொடூரமான சம்பவம் நினைவுக்கு வந்துவிடுகிறது.
 
வழக்கு விசாரணை நடந்த காலகட்டத்தில், என்னை யாரோ உற்றுநோக்குவது போலவும், பின்தொடர்வது போலவும் உணர்ந்தேன். ஆனால், தற்போது நீதி கிடைத்த பிறகு, அந்த அச்ச உணர்வு எங்கோ சென்றுவிட்டது.
 
நீதிக்கான நீண்டகால போராட்டத்தில் நாங்கள் வெற்றிப்பெற்றிருந்தாலும், பயம், ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்த வலி, எங்களது மகள் சலேஹா குறித்த நினைவுகள் எப்போதுமே எங்களை விட்டு விலகாது.
 
நான் தற்போது எனது குழந்தைகளுடன் அமைதியான வாழ்க்கையை முன்னெடுக்க விரும்புகிறேன். ஒருநாள் என்னுடைய மகள் வழக்குரைஞராகி, அநீதி இழைக்கப்பட்டவர்களுக்காக போராடுவார் என்று நான் கனவு காண்கிறேன்.
 
நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறைக்கு மாறாக, அன்பும் சமாதானமும் நிலவுவதற்காக நான் பிரார்த்திக்கிறேன்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்