பெர்சவரன்ஸ் ரோவர்: செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளதா?

Webdunia
புதன், 18 மே 2022 (15:36 IST)
நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் ஒரு முக்கியமான தருணத்தை எட்டியுள்ளது.
 
செவ்வாய்க்கிழமை, பெர்சவரன்ஸ் என்ற ஆறு சக்கர ரோபோ தரையிறங்கிய பள்ளத்தில் இருந்த ஒரு பழங்கால டெல்டா அம்சத்தின் மீது ஏறத் தொடங்குகிறது. அந்தப் பழங்கால டெல்டாவில் மேல்நோக்கிச் செல்லும்போது, செவ்வாய் கிரகத்தில் கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களைத் தக்க வைத்திருப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் இருக்கக்கூடிய பாறைகளை ஆய்வு செய்ய அடிக்கடி நிறுத்தப்படும்.
 
மீண்டும் கீழிறங்கும் வழியில், பெர்சவரன்ஸ் இந்தப் பாறைகளில் சிலவற்றைச் சேகரித்து டெல்டாவின் கீழ்பகுதியில் வைக்கும். அதன்மூலம் எதிர்கால திட்டங்களின் மூலம் அவற்றைக் கொண்டு வர முடியும். 2030-களில் அவற்றை விரிவான ஆய்வுக்காக பூமிக்குக் கொண்டு வருவதே இலக்கு.
 
"ஜெஸெரோ பள்ளத்தில் அமைந்துள்ள டெல்டா பகுதி, பெர்சவரன்ஸின் முக்கிய வான் உயிரியல் இலக்கு," என்று திட்ட துணை விஞ்ஞானி, முனைவர் கேட்டி ஸ்டாக் மோர்கன் கூறினார். "இந்த பாறைகள் பழங்காலத்தில் உயிர்கள் வாழ்ந்தமைக்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பதற்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டிருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். மேலும், செவ்வாய் கிரகத்தின் காலநிலை மற்றும் காலப்போக்கில் அது எப்படி உருவானது என்பதைப் பற்றியும் அவற்றால் நமக்குச் சொல்ல முடியும்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
 
கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் 45 கி.மீ. அகலமுள்ள ஜெஸெரோ பள்ளத்தின் நடுவே ரோவர் தனது தரையிறங்கியது. அப்போதிலிருந்து, அது தனது மினி ஹெலிகாப்டரை பறக்கவிடுவது, அதன் சுற்றுப்புறங்களைப் பற்றிய பொதுவான தகவல்களைச் சேகரிப்பது என அதன் கருவிகளைச் சோதித்து வருகிறது.
 
ஆனால், சிவப்பு கிரகத்தின் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பகுதிக்கு, ஜெஸெரோவின் மேற்கிலுள்ள வண்டல் மேட்டை ஆய்வு செய்யச் செல்வதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது.
 
செயற்கைக் கோள் படங்களின் அடிப்படையில் நீண்ட காலமாக டெல்டாவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பெர்சவரன்ஸ் தரையில் மேற்கொண்ட ஆரம்பகட்ட அவதானிப்புகள் இப்போது இந்த மதிப்பீட்டை உறுதி செய்துள்ளன.
 
டெல்டா என்பது ஒரு பரந்த நீர்நிலைக்குள் நுழையும்போது ஆற்றின் மூலம் கொட்டப்படும் வண்டல் மற்றும் மணலில் இருந்து உருவாகும் ஒரு நில அமைப்பாகும். ஆற்றின் நீரோட்டத்தில் ஏற்படும் திடீர் மந்தநிலை, அது சுமந்து செல்லும் எதையும் ஆற்றிலிருந்து வெளியே ஒதுங்க விடுகிறது.
 
ஜெஸெரோவின் விஷயத்தில், பரந்த நீர்நிலையானது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பள்ளம், அகலமான ஏரியாக இருக்கலாம். "டெல்டாவில் ஓடும் ஆறுகள், சத்துக்களைக் கொண்டு வரும், அவை உயிர்களுக்கு உதவியாக இருக்கும், பின்னர் டெல்டாவில் அதிகளவில் கொண்டு வந்து போடப்படும் நுண்ணிய வண்டல், நிலத்தின் பாதுகாப்புக்கு நல்லது," என்று திட்ட விஞ்ஞானியான, பிரிட்டனின் லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த சஞ்சீவ் குப்தா விளக்கினார்.
 
மேலும், "அங்கு உயிர்கள் இருந்திருந்தால், அது ஆற்றில் இருந்து டெல்டாவில் குவித்திருக்க வாய்ப்புகள் உள்ளன," என்றார். சமீப நாட்களில், ஹாக்ஸ்பில் கேப் என்றழைக்கப்படும் டெல்டாவில் பெர்சவரன்ஸ் தன்னைத்தானே மெல்லச் சாய்த்துக்கொண்டு மேலேறத் தொடங்கியது. இதுவொரு மென்மையான சாய்வு தான். இது ரோபோவை, பள்ளத்தின் தரையிலிருந்து சில பத்து மீட்டர் உயரத்திற்கு மேலே கொண்டு செல்லும்.
 
பெர்சவரன்ஸ் மெல்ல நகர்ந்து சென்று, சில நேர்த்தியான அடுக்குகள், நேர்த்தியான வடிவங்கள் உள்ள டெல்டா பாறைகளைத் தேடும். "ரோவரில் அற்புதமான கருவிகள் உள்ளன. அவை, வண்டல்களின் உப்பு அளவை ஆய்வு செய்வதன் மூலம், டெல்டாவின் வேதியியல், கனிமவியல் மற்றும் அதன் கட்டமைப்பைப் பற்றி நமக்குக் கூறுகின்றன.
 
இந்தப் பழங்கால ஏரியின் நீர் அமிலமா இல்லை சமநிலையானதா, அது வாழக்கூடிய சூழலாக இருந்ததா, எந்த வகையான வாழ்க்கைச் சூழலை அது ஆதரித்திருக்கலாம், என அதன் வேதியியலைப் பற்றி அறிந்துகொள்வோம்" என்று இந்தியானாவிலுள்ள பர்டூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திட்ட விஞ்ஞானி பேராசிரியர் பிரியோனி ஹோர்கன் கூறினார்.
 
தெளிவாகச் சொல்வதென்றால், செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் எப்போதாவது வாழ்ந்தனவா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அப்படி இருந்திருந்தால், இந்தப் பள்ளத்தின் தளத்திற்குத் திரும்பும் வழியில், பெர்சவரன்ஸ் தேர்ந்தெடுக்கும் மூன்று அல்லது நான்கு பாறைகளை ஆய்வு செய்வது நமக்குச் சொல்லிவிடலாம்.
 
ரோபோ எவ்வளவு திறன் வாய்ந்ததாக இருந்தாலும்கூட, அதனால் எந்த உறுதியான தகவலையும் கூறமுடியாது. பூமியில் கூட, நுண்ணுயிர்கள் பில்லியன் கணக்கான ஆண்டுகளாக இருந்ததை நாம் அறிவோம். இருந்தாலும், அவற்றின் ஆரம்பகால புதைபடிவ வடிவங்களின் சான்றுகளையே விளக்குவது கடினம்.
 
செவ்வாய் கிரகத்தின் வாழ்க்கைச் சூழல் குறித்த உண்மைகளை நிறுவுவதில், ரோவரின் பாறை சேகரிப்புகளை பூமிக்குக் கொண்டு வரும்வரை காத்திருக்க வேண்டும். அதற்கு கடுமையான ஆய்வுகளை பெரிய ஆய்வகங்களில் செய்யவேண்டும்.
 
"நமது சூரிய குடும்பத்தில் உள்ள மற்றொரு கிரகத்தில் நுண்ணுயிர்கள் இருப்பதாகக் கூறுவது ஒரு மகத்தான கூற்று. எனவே, ஆதாரமும் அதற்கு மிகப் பெரியதாக இருக்க வேண்டும்," என்று நாசாவின் பெர்சவரன்ஸ் திட்ட மேலாளரான ஜெனிஃபர் ட்ரோஸ்பர் கூறினார்.
 
"அங்குள்ள கருவிகளால் அந்த அளவிலான ஆதாரத்தை வழங்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. அவற்றால் 'ஒருவேளை இதுவாக இருக்கலாம்' என்ற அளவிலேயே வழங்கமுடியும், பிறகு அந்த மாதிரிகளை மீண்டும் பூமிக்குக் கொண்டு வந்து, மேலும் அதிநவீனமாக, பெரிய கருவிகளின் உதவியோடு உறுதி செய்துகொள்ள வேண்டும்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
 
இந்த ஆண்டின் இறுதியில் பள்ளத்தின் தரைக்குத் திரும்பும்போது பெர்சவரன்ஸ் அது சேகரித்த முதல் பாறைகளைக் கீழே வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைய பயணத்தில் சேகரிக்கப்படும் பாறைகளை மட்டுமின்றி, முந்தைய மாதங்களில் சேகரிக்கப்பட்ட நான்கு மாதிரிகளையும் அங்கு வைக்கும்.
 
நாசா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து, அவற்றை மீட்டெடுக்கத் தேவையான பணிகளைத் திட்டமிடுவதற்கான கட்டத்தில் இருக்கிறது. மார்ஸ் ராக்கெட் என்ற மற்றொரு ரோவரும் கேரியர் விண்கலத்தையும் அனுப்பும் முயற்சிகள் 2030-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட வேண்டும்.
 
பெர்சவரன்ஸுக்கு இன்னும் பல ஆண்டுகள் அங்கு வேலை இருக்கிறது. அது தனது முதல் பாறைகளைக் கீழே இறக்கி வைத்த பிறகு, மீண்டும் டெல்டாவின் உச்சியில் ஹாக்ஸ்பில் இடைவெளிக்கும் அதற்கு அப்பாலும் சென்று, பண்டைய ஜெஸெரோ ஏரிக்கு கடற்கரை எச்சங்களாக இருக்கும் பாறைகளைப் பார்வையிடும்.
 
இந்த படிமங்கள், கார்பனேட் தாதுக்களால் ஆனவை. இது மீண்டும், கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான (ஒருவேளை இருந்திருந்தால்) அமைப்பில் உருவாகியிருப்பதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்