தமிழ்க் கைதிகள் விடுதலை கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

திங்கள், 7 மார்ச் 2016 (19:56 IST)
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்ற 14 தமிழ்க் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று திங்களன்று நடத்தப்பட்டிருக்கின்றது.


 

 
மன்னார் பிரஜைகள் குழுவின் அழைப்பில் இந்தப் போராட்டம் யாழ் முனியப்பர் ஆலய முன்றலில் நடைபெற்றுள்ளது.
 
குற்றச்சாட்டுக்கள் எதுவுமற்ற நிலையில், வழக்கு விசாரணைகளின்றி வெறும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை உடனடியாக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தின் மூலம் கோரப்பட்டிருக்கின்றது.
 
மன்னார் பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தர்கள், தமிழ்க் கைதிகளின் குடும்ப உறவினர்கள், அரசியல்வாதிகள், அருட் சகோதரிகள், அருட் தந்தையர் என பலதரப்பட்டவர்களும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
 
பதின்மூன்றாவது நாளாக தமிழ்க் கைதிகள் 14 பேரும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களில் மூவரின் உடல் நிலை மோசமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்