புதிய மின்சார கொள்கை: மத்திய அரசின் அறிவிப்பால் மின்சார கட்டணம் உயருமா?

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (11:32 IST)
நேர அடிப்படையில் மின் கட்டண நிர்ணயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, மின் கட்டணம் மீண்டும் உயருமோ என்ற அச்சத்தை மக்களிடையே விதைத்துள்ளது.
 
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தியதும் புதிய மின்சார கட்டண கணக்கீடு அமலுக்கு வரும் என்கிறது மத்திய அரசு. இதன் மூலம் மின்சார கட்டணத்தை குறைத்துக் கொள்ளும் வகையில் மக்கள் தங்களது மின்சார பயன்பாட்டை மக்கள் திட்டமிட்டுக் கொள்ள முடியும் என்று மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் கூறுகிறார்.
 
ஆனால், மத்திய அரசின் அறிவிப்பு மின் கட்டணம் உயர வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. அத்துடன், நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் கட்டாயம் என்ற அறிவிப்பும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
 
மின்சார (நுகர்வோர் உரிமை) கொள்கை-2020இல் சில திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 23-ம் தேதியிட்ட அறிவிப்பு, 'நேர அடிப்படையில் மின்சார கட்டணம் கணக்கிடப்படும், ஸ்மார்ட் மீட்டர் விதிகள் எளிமையாக்கப்படும்' என்று கூறுகிறது.
 
அதன்படி, "பகலில் மின் கட்டணம் 20 சதவீதம் குறைவாக இருக்கும். மின் கட்டணம் உச்சமாக இருக்கும் நேரத்தில் 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணம் கூடுதலாக இருக்கும். நேர அடிப்படையில் மின் கட்டணத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நுகர்வோர் பலன் பெறுவார்கள்" என்று அந்த அறிவிப்பு கூறுகிறது.
 
அதன்படி, 10 கிலோவாட்டிற்கும் அதிகமான மின் தேவை இருக்கும் வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நேர அடிப்படையில் மின் கட்டணம் அமலுக்கு வரும்.
 
விவசாயம் அல்லாத மற்ற வீடு, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து நுகர்வோருக்கும் 2025-ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் புதிய மின் கட்டண முறை அமலுக்கு வருகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதுமே, அந்த மின் இணைப்பில் புதிய கட்டண முறை செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
நுகர்வோர் மின் கட்டணத்தை குறைத்துக் கொள்வது சாத்தியமாகும் அதேநேரத்தில், பவர் கிரிட் போன்ற ஆதார வளங்களை திறம்பட பயன்படுத்திக் கொள்ளவும் முடியும் என்று மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.
 
கட்சிகள் சந்தேகமும், மின்சார வாரிய விளக்கமும்
புதிய மின்சார கொள்கையால் மின் கட்டணம் குறையும் என்று மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும், அதனை எதிர்க்கட்சிகள் சந்தேகத்துடனேயே பார்க்கின்றன.
 
புதிய அறிவிப்பு மின் கட்டணத்தை உயர்த்தவே வழிவகை செய்யும் என்று அக்கட்சிகள் வாதிடுகின்றன. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வமும் அதே கருத்தை முன்வைத்துள்ளார். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மின்சார – நுகர்வோர் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று மத்திய அரசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
 
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. "தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் தமிழக ஒழுங்குமுறை ஆணையத்திற்கே உள்ளது. தற்போதுள்ள மின் கட்டண ஆணைப்படி உச்ச நேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோருக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதால் இந்தத் திருத்தத்தால் தமிழகத்தில் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்" என்று அது உறுதியளித்துள்ளது.
 
"புதிய மின்சார கொள்கையால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை"
ஆனாலும், பொதுமக்களிடையே நிலவும் சந்தேகம் முழுமையாக தீரவில்லை. தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 8 மாதங்களே ஆகியுள்ள நிலையில், மத்திய அரசின் அறிவிப்பால் மீண்டும் கட்டண உயர்வு இருக்குமோ என்ற அச்சம் இருக்கவே செய்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் வணிக மற்றும் தொழில் பயன்பாட்டிற்கு புதிய கட்டண முறை அமலுக்கு வருவது குறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்க(டேக்ட்) தலைவர் ஜேம்ஸிடம் பேசினோம்.
 
அவர் கூறுகையில், "நேர அடிப்படையில் கட்டணம், பகலில் குறைவு, இரவில் அதிகம் என்று கூறுகிறார்கள். தமிழ்நாடு அரசு அண்மையில்தான் மின் கட்டணத்தை கூட்டியுள்ளது. தற்போது நேர அடிப்படையில் மாற்றம் என்றால், பகலின் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணத்தை குறைக்கவா போகிறார்கள்? அந்த விஷயத்தில் தெளிவு கிடைக்கும் வரை இந்த புதிய மின்சார கொள்கையால் எந்த லாபமும் எங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை."
 
"மின்சார பயன்பாட்டை அளவிட ஸ்மார்ட் மீட்டர் ஏதும் பொருத்தப்படாத நிலையிலேயே, சரியான கணக்கீடு ஏதுமின்றி சமீபமாக எங்களைப் போன்ற சிறு தொழில்முனைவோரிடம் காலையில் 4 மணி நேரம், மாலையில் 4 மணி நேரம் உச்சக்கட்ட பயன்பாட்டு நேரம் என்று கூறி 15 சதவீதம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்போது ஸ்மார்ட் மீட்டர், நேர அடிப்படையில் மின் கட்டணம் என்று கூறுகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் அடுத்து என்ன செய்யப் போகின்றன என்று தெரியவில்லை." என்றார்.
 
மேலும் தொடர்ந்த அவர், "சந்தைப் பொருளாதாரத்தில் அடியெடுத்து வைத்த பிறகு, மத்திய, மாநில அரசுகள் எங்களைப் போன்ற சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீதே சுமைகளை ஏற்றி வைக்கின்றன. முன்பெல்லாம் எங்களது செலவினத்தில் பத்தில் ஒரு பகுதி மட்டுமே மின் கட்டணத்திற்காக ஒதுக்க வேண்டியிருந்தது. தற்போது, அதுவே பெரும் பகுதியாக மாறி, பத்தில் 3 சதவீத இடத்தைப் பிடித்துள்ளது.
ஏற்கனவே பல சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. எஞ்சியுள்ள நிறுவனங்கள் பலவற்றிலும் சிக்கல் இருக்கிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு உச்சவரம்பை 20 லட்சம் ரூபாயில் இருந்து 5 கோடி ரூபாயாக மத்திய அரசு உயர்த்திய பிறகு எங்களுக்கு கிடைத்து வந்த கொஞ்ச, நஞ்ச மானியங்களும், சலுகைகளும் கிடைக்காமல் போய்விட்டன. ஏனெனில், இந்த வரம்புக்குள் வந்த எங்களை விட பெரிய நிறுவனங்களே அவற்றைப் பெற்றுவிடுகின்றன. எங்களால் அவர்களுடன் போட்டியிட முடியவில்லை." என்று வேதனை தெரிவித்தார்.
 
"புதிய கட்டண முறை தேவையில்லாத ஒன்று"
அதேநேரத்தில், மத்திய அரசு குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்குள் புதிய கட்டண முறை அமலுக்கு வருவது சாத்தியமில்லை என்று தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் தலைவர் எஸ். காந்தி கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மத்திய அரசு கூறும் காலக்கெடுவுக்குள் நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டரை பொருத்திவிட முடியாது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள மின் இணைப்புகளில் ஒரு பகுதி மட்டுமே ஸ்மார்ட் மீட்டருக்கு மாறியுள்ளது. அனைத்து இணைப்புகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட இன்னும் காலம் பிடிக்கும். அதேபோல் நாடு முழுவதும் பல கோடி இணைப்புகளில் பொருத்துவதற்குத் தேவையான ஸ்மார்ட் மீட்டர்களுக்கு எங்கே போவது?
 
ஸ்மார்ட் மீட்டர் ஏதும் பொருத்தப்படாமலேயே தமிழ்நாட்டில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்கான மின் கட்டணம் கடந்த ஆண்டு முதலே நேர அடிப்படையில்தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இதுபோன்று வீடுகளில் செய்வது சாத்தியமில்லை. தற்போதுள்ள எலக்ட்ரானிக் மீட்டர்களில் சுமார் 7 லட்சம் மீட்டர்களில் மட்டுமே அதற்கான வசதி உள்ளது" என்றார்.
 
அதேநேரத்தில், மத்திய அரசின் இந்த திட்டம் தேவையில்லாதது என்கிறார் அவர். "மக்களின் அத்தியாவசியத் தேவையான மின்சாரத்திற்கான கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் இடத்தில்தான் மத்திய, மாநில அரசுகள் இருக்கின்றன. மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு உடன்படுவது அரசின் வேலை இல்லை. அரசு தான் மின் கட்டணத்திற்கு உச்சவரம்பை நிர்ணயிக்க வேண்டும். அதுதான் உங்கள் வேலை. அதனை செய்வதை விடுத்து, இதுபோன்ற செயல்களில் இறங்கக் கூடாது" என்று காந்தி கூறினார்.
 
"தற்போதுள்ள மீட்டரே போதும், ஸ்மார்ட் மீட்டர் தேவையில்லை"
நேர அடிப்படையில் மின் கட்டணம் அமலுக்கு வந்தால் என்ன மாற்றம் நிகழும் என்பது குறித்து அறிய தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முன்னாள் செயற்பொறியாளர் அக்ஷய் குமாரை பிபிசி தமிழ் சார்பில் தொடர்பு கொண்டோம். மின் கட்டணம் உயர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "நேர அடிப்படையில் மின் கட்டணம் நிர்ணயம் அமலுக்கு வருவதால் மின்சார கட்டணம் கூடுமா, குறையுமா என்பது மத்திய, மாநில அரசுகளின் முடிவைப் பொருத்தது. அதுகுறித்து இப்போது ஏதும் கூற முடியாது." என்று கூறினார்.
 
அதே நேரத்தில் ஸ்மார்ட் மீட்டர் குறித்து முன்வைத்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஆனால், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் புதிய மின்சார கட்டண கணக்கீடு அமலுக்கு வரும் என்பது தான் ஏன் என்று தெரியவில்லை. ஏனெனில், தற்போதுள்ள எலக்ட்ரானிக் மீட்டரைக் கொண்டே நேர அடிப்படையில் மின்சார பயன்பாட்டின் அளவை துல்லியமாக கணக்கிட்டு விடலாம். அதற்கான வசதி தற்போதுள்ள எலக்ட்ரானிக் மீட்டரிலேயே இருக்கும் போது ஸ்மார்ட் மீட்டர் எதற்கு?
 
எலக்ட்ரானிக் மீட்டரில் சிம் கார்டை பொருத்தி புரோகிராம் செய்வதன் மூலம் குறிப்பிட்ட அந்த இணைப்பில் மின்சாரம் எந்த நேரத்தில் பயன்படுத்தப்படுகிறது? மின்சாரம் திருடப்படுகிறதா? என்பதை மின்சார வாரியம் இருந்த இடத்திலேயே தெரிந்து கொள்ள முடியும். அங்கே 3 முனை மின் இணைப்பில் ஏதேனும் ஒன்று துண்டிக்கப்பட்டாலும் கூட மின்வாரியத்திற்கு உடனே தெரிந்துவிடும். இத்தனை வசதிகள் இருக்கும் போது அவசர, அவசரமாக ஸ்மார்ட் மீட்டருக்கு ஏன் மாற வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.

"99% பேர் மின் கட்டணத்தை சரியாக செலுத்துகின்றனர்"
எலக்ட்ரானிக் மீட்டர் - ஸ்மார்ட் மீட்டர் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பேசிய அவர், "எலக்ட்ரானிக் மீட்டரில் இல்லாத ஒன்று ஸ்மார்ட் மீட்டரில் உள்ளதென்றால், அது தொலைவில் இருந்தபடியே குறிப்பிட்ட ஒரு மின் இணைப்பைத் துண்டிப்பது மட்டும்தான். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டிருந்தால், மின் கட்டணம் செலுத்தாத பட்சத்தில் தொலைவில் இருந்தபடியே அங்கே மின் இணைப்பை துண்டிக்கவும், கட்டணம் செலுத்திய பிறகு மீண்டும் கொடுக்கவும் முடியும்."
 
"தமிழ்நாட்டைப் பொருத்தவரை அந்த வசதி தேவையே இல்லை. ஏனெனில், இங்குள்ள 99 சதவீத மின் இணைப்புகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சரியாக கட்டணம் செலுத்தப்பட்டு விடுகிறது. ஆன்லைன் வழியாகவும், மின் வாரிய அலுவலகங்களில் நீண்ட வரிசையில் நின்றும் மக்கள் மின்சார கட்டணத்தை செலுத்துகின்றனர். எஞ்சிய ஒரு சதவீதம் என்பது, குறிப்பிட்ட அந்த கால அவகாசத்தில் கட்டணத்தை கட்ட முடியாமல் தவிப்பர்கள்தான். தமிழ்நாட்டில் வேண்டுமென்றே மின் கட்டணத்தை செலுத்தாமல் தவிர்ப்பவர்கள் வெகு சொற்பம்தான். அந்த ஒரு சிலரின் மின்சார இணைப்புகளை நேரில் சென்று துண்டிப்பதில் என்ன சிரமம் வந்துவிடப் போகிறது?" என்று கேட்டார்.
 
ஸ்மார்ட் மீட்டருக்கான செலவை யார் சுமப்பது?
மேலும் தொடர்ந்த அவர், "தமிழ்நாட்டில் அனைத்து மின்சார இணைப்புகளிலும் எலக்ட்ரானிக் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வெகுநாட்கள் ஆகிவிடவில்லை. அதற்குள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது என்றால், அதற்கான பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு யார் தலையில் வந்து விழும்? தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது. இப்போது மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் சுமையை ஏற்றினால் அந்த சுமையை யார் சுமப்பது?
 
தமிழ்நாட்டில் சுமார் 1.5 கோடி மின் இணைப்புகளில் மின் கட்டணமே செலுத்துவதில்லை. அதாவது, அரசு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரத்திற்குள்ளேயே அவர்கள் தங்களது மின்சார பயன்பாட்டை சுருக்கிக் கொள்கிறார்கள். எஞ்சிய சுமார் ஒன்றரை கோடி இணைப்புகளுக்குத் தான் மின் கட்டணம் வருகிறது." என்றார்.
 
"மின் கட்டணம் யூனிட்டுக்கு 15 ரூபாயாகும்"
"புதிய கட்டண முறையால் ஏற்படும் மாற்றங்கள் குறித்த தனது கணிப்பையும் அக்ஷய்குமார் முன்வைத்தார். "வரும் காலத்தில் வசதி படைத்தவர்கள் சூரிய மின்சக்திக்கு மாறி விடுவார்கள். ஏழைகள் 100 யூனிட் இலவச மின்சாரத்திற்குள்ளேயே காலத்தை கடத்தி விடுவார்கள். இரண்டிற்கும் இடைப்பட்ட நடுத்தர மக்கள்தான் இந்த ஒட்டுமொத்த சுமையையும் தாங்க வேண்டியிருக்கும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான செலவுகளை ஈடுகட்ட மின்சார கட்டண உயர்வு தவிர்க்க இயலாததாகி விடும். அப்போது யூனிட் ஒன்றுக்கு மின் கட்டணம் 15 ரூபாய் வரையிலும் உயர்ந்துவிடும். நிலைமையை சமாளிக்க வேறு வழியே இல்லாமல் போய்விடும்."
"நேர அடிப்படையில் மின் கட்டணம் என்பதை தற்போதுள்ள எலக்ட்ரானிக் மீட்டர்களைக் கொண்டே செயல்படுத்திவிட முடியும் எனும் போது ஸ்மார்ட் மீட்டர் கட்டாயம் என்பது மிகப்பெரிய ஊழல். 140 கோடி மக்கள் தொகையைக் கடந்து விட்ட இந்தியாவில் அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் கட்டாயம் எனும் போது எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் விரயமாகிறது? அதற்கான அவசியம் என்ன? மக்கள் தலையில் தேவையற்ற சுமையை ஏற்றுவது யார்? அதற்கு யார் காரணம்?" என்று அவர் ஆவேசமாகக் கேட்டார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்