நரேந்திர மோதி பேச்சு: ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’- ஐ.நா. சபையில் கணியன் பூங்குன்றனாரை மேற்கோள் காட்டிய பிரதமர்

Arun Prasath

வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (20:46 IST)
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோதி, ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியபோது, கடந்த 5 ஆண்டுகளில் தனது அரசு நிகழ்த்திய சாதனைகளையும், இனி செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

''உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 100 கோடிக்கும் மேலான மக்கள் வாக்களித்து மீண்டும் எங்கள் அரசு ஆட்சி பொறுப்பேற்றது. மக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்றதால்தான் தற்போது உங்கள் முன்னர் நான் நிற்கிறேன்'' என்று மோதி குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அரசின் சாதனைகள் பலவற்றை எடுத்து கூறியுள்ளார். அவை பின்வருமாறு:-

நான் இங்கு வரும்போது இந்த ஐ.நா. சபை சுவர்களில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்ற வாசகத்தை கண்டேன். தற்போது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை நாங்கள் தடை செய்துள்ளோம். இதனை விரைவில் சாதிக்க உள்ளோம் என்று மகிழ்வுடன் இங்கு கூறுகிறேன்.

உலக வெப்பமயமாதலை கருத்தில் கொண்டு பல திட்டங்களை நாட்டில் நிறைவேற்றி வருகிறோம். பருவநிலை மாற்றம் குறித்து பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைளை எடுத்து வருகிறோம்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் நேரம் இது. இந்தியாவில் மக்களின் சுகாதாரம் மற்றும் உடல்நலனை எங்கள் அரசு மிகவும் முக்கியமாக கருதுகிறது. 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோயை முழுமையாக ஒழிக்க முழு முயற்சியில் இறங்குவோம்.

கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை எங்களது அரசு கட்டியுள்ளது. இந்தியாவில் 50 கோடி மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் 2022-ஆம் ஆண்டில், மேலும் பல ஆயிரம் வீடுகள் கட்ட திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கலாசாரம் இந்தியாவுடையது. 3000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் மிகவும் பழமையான இந்திய மொழியான தமிழில், கவிஞர் கணியன் பூங்குன்றனார் ''யாதும் ஊரே, யாதும் கேளிர்'' என்ற உயரிய கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியாவின் பண்பாடும், கலாசாரமும் அத்தகைய சிறப்பு வாய்ந்தது.

நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் தீட்டப்பட்டு வரும் நிலையில், எங்கள் அரசு தீவிரவாதத்தை கடும் கரம் கொண்டு அடக்குவதில் முழு முனைப்பில் உள்ளது.

மனிதகுலத்துக்கு மிகப்பெரிய ஆபத்து தீவிரவாதம் என்று குறிப்பிட்ட நரேந்திர மோதி, தீவிரவாதம் குறித்து இந்த உலகம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் 15 கோடி இல்லங்களில்  தண்ணீர் வசதி வழங்க எங்கள் அரசு உறுதி மேற்கொண்டுள்ளது என்று மோதி தனது உரையில் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்