இஸ்லாமிய முறைப்படி திருமணம் முடித்தார் மலாலா யூசஃப்சாய்!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (12:10 IST)
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற செயல்பாட்டாளர் மலாலா யூசஃப்சாய் திருமணம் பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் நகரில் நடந்து முடிந்துள்ளது.
 
அசர் மாலிக் என்பவரை மலாலா யூசஃப்சாய் மணம் முடித்துள்ளார். தங்கள் திருமண நாள் தமது வாழ்வின் ஒரு மதிப்புமிக்க நாள் என்று 24 வயதாகும் மலாலா யூசஃப்சாய் கூறியுள்ளார்.
 
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, தமது பள்ளிக் காலத்திலிருந்தே பெண்கள் கல்விக்கான செயல்பாட்டாளராக இருந்தவர். மலாலா 2012ஆம் ஆண்டு தாலிபான் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார்.
 
அதன்பின்பு பாகிஸ்தானில் இருந்து வெளியேறி பிரிட்டனின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் கவுன்டியில் வசித்து வருகிறார்.
 
"எங்களது குடும்பத்தினர் கலந்து கொண்ட சிறிய நிக்கா நிகழ்வில் அசரும் நானும் வாழ்விணையர்களாகத் திருமணம் செய்து கொண்டோம்," என்று செவ்வாய்க்கிழமை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் மலாலா.
இந்தப் பயணத்தில் ஒன்றாகப் பயணிப்பது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
பாகிஸ்தானில் தாலிபன்களால் மலாலா சுடப்பட்ட பொழுது அவருக்கு வயது 15.
 
மலாலா மற்றும் அவரது சக மாணவிகள் சென்று கொண்டிருந்த பள்ளி வாகனம் ஒன்றை ஸ்வாட் பள்ளத்தாக்கின் வடமேற்குப் பகுதியில் வழிமறித்த தீவிரவாதிகள் அதிலிருந்தவர்களைத் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
 
இந்தத் துப்பாக்கித் தாக்குதலில் மலாலா யூசஃப்சாய் மற்றும் அவரது சக மாணவர்கள் இருவர் காயமடைந்தனர்.
 
உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் மோசமான இந்தத் தாக்குதலிலிருந்து மீண்ட பின்பு மலாலா மற்றும் அவரது குடும்பத்தினர் பிரிட்டனின் பர்மிங்காம் நகருக்குக் குடிபெயர்ந்தனர். இந்த நகரம் தமக்கு இரண்டாவது வீடு என்று மலாலா கூறுகிறார்.
 
மிகவும் இளம் வயதில் நோபல், ஐ.நா தூதர்
மலாலா யூசஃப்சாய்க்கு 17வது வயதில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசின் வரலாற்றிலேயே மிகவும் குறைந்த வயதில் இந்த கௌரவதைப் பெற்றவர் மலாலாதான்.
 
நோபல் பரிசை வென்றபின் மலாலா யூசஃப்சாய், மிக இளம் வயதில் ஐ.நாவின் அமைத்திக்கான தூதுவராகவும் நியமிக்கப்பட்டார்.
 
கலை, இலக்கியம், அறிவியல், பொழுதுபோக்கு, விளையாட்டு அல்லது பொது வாழ்வுடன் தொடர்புடைய பிற துறைகளிலிருந்து ஐ.நாவின் அமைதிக்கான தூதவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மலாலா யூசஃப்சாய் உயர் கல்வியை முடித்தார். படித்து முடித்த பின்பு மனித உரிமை செயற்பாட்டாளராக தற்போது இயங்கி வருகிறார் மலாலா.
 
ஆப்கன் அகதிகளுக்கு மேலதிக உதவிகள் கிடைப்பது, பெண்கள் கல்வி உள்ளிட்டவற்றுக்கு மலாலா குரல் கொடுத்து வருகிறார்.
 
பிரிட்டனில் சட்டப்பூர்வ ஒப்பந்தமாகச் செல்லாது என்றாலும், நிக்கா நிகழ்வு இஸ்லாமிய திருமணத்தின் முதல் படியாக உள்ளது.
 
இதன்பின் ஒரு தனி நிகழ்வு நடத்தப்படும். அது எப்போது நடக்கும் என்று மலாலா இன்னும் தெரிவிக்கவில்லை.
 
'ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்?'
 
கடந்த காலங்களில் திருமண உறவு மீதான தமது நம்பிக்கையின்மையை மலாலா வெளிப்படுத்தியுள்ளார்.
 
வோக் (Vogue) இதழுக்கு ஜூலை மாதம் அளித்த பேட்டி ஒன்றில்,"மக்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. உங்கள் வாழ்வில் ஓர் இணையர் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் ஏன் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கிறது? அது ஏன் ஒன்றாக சேர்ந்து வாழ்வதாக மட்டும் இருக்கக்கூடாது," என்று கேள்வி எழுப்பியிருந்தார் மலாலா.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்