இஸ்லாமிய பெண்களின் உடை அலங்காரமா? அடிமைத்தனத்தின் சின்னமா?

வியாழன், 9 ஜூன் 2016 (20:26 IST)
மதச்சார்பற்ற நாடான பிரான்ஸில் இஸ்லாமிய பெண்கள் உடை அணிவதை அடிமைதனத்தின் சின்னமாக கருதுகிறார்கள். மேலும் அந்நாட்டு பெண்ணியவாதிகள் கட்டுபாடு நிறைந்த மதம் என்ற கொள்கையை ஆணாதிக்க சமுகத்தின் வெளிபாடு என்று கருதுகின்றனர்.


 

 
மதக்கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்கும் முஸ்லிம் பெண்களுக்கான நாகரிக உடைகள் என்பது உலகம் முழுவதும் மிகப்பெரிய வர்த்தகமாக வளர்ந்து வருகிறது.
 
ஆனால் இஸ்லாமிய சந்தைக்காக மட்டும் ஆடைஅணிகலன்களை தயாரிக்கும் நிறுவனங்களை பிரான்ஸின் பெண்கள் உரிமைகளுக்கான அமைச்சர் விமர்சித்ததைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை ஒன்று வெடித்திருக்கிறது.
 
இப்படிப்பட்ட உடைகளை அணியும் பெண்கள் விரும்பிச் செல்லும் அடிமைகள் என்று அமைச்சர் விமர்சித்திருந்தார்.
 
அமைச்சரால் விமர்சிக்கப்படும் இஸ்லாமிக் ஃபாஷன் உடைகளை வடிவமைப்பவர்களின் இமான் மற்றும் லாமியா மெஸ்தாவி சகோதரிகளும் அடங்குவார்கள்.
 
பிரெஞ்சு முஸ்லிம் பெண்களுக்கான பர்சா மாடஸ்ட் ஃபேஷன் துணிமணிகள் என்னும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் இவர்கள்.
 
வரவிருக்கும் ரமதான் காலத்துக்கான புதிய அங்கியை தங்களின் பிரத்யேக வடிவமைப்பாளருடன் இணைந்து வடிவமைப்பதில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 
இவர்களின் பர்சா ஆடையகத்தின் நோக்கம் பாரிஸின் ஒயிலையும் நவநாகரிக நளினத்தையும் மதத்தின் தேவைகளையும் ஒருங்கிணைப்பது.
 
உலக ஃபாஷன் தலைமையகத்தில் லட்சக்கணக்கான முஸ்லீம்கள் இருக்கும் சூழலில் இவர்கள் வடிவமைக்கும் நவீன உடைகள் பெரிய அளவில் விற்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது தவறு. பர்சா என்பது நவநாகரிக உடைகளுக்கான மிகச்சில பிரென்ச் லேபிள்களில் ஒன்று.
 
காரணம் பிரான்ஸில் மதச்சார்பின்மை, அதாவது பொதுவெளியில் மதம் விலக்கி வைக்கப்படுவது புனிதமானதாக பார்க்கப்படுகிறது. மதசார்பற்ற தன்மையை பிரான்ஸிலுள்ள பலரும் உணர்ச்சிப்பூர்வமாக அணுகுகிறார்கள்.
 
லாபம் கொழிக்கும் முஸ்லிம் சந்தையைக் கைப்பற்ற முன்னணி சர்வதேச நாகரிக உடையணி நிறுவனங்கள் முயலும்போது இதுபோன்ற “கண்ணியமான உடைகள்” என்பவை பின்னோக்கிய பயணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. பெண்களை அடிமைப்படுத்தும் உடைகள் பிரான்ஸின் விழுமியங்களுக்கு முரணானவை என்பது இவர்கள் கவலை.
 
"இஸ்லாமிக் ஃபேஷன் என்பதே விசித்திரமாக இருக்கிறது", என்கிறார் பெண்ணியவாதியான மேரி அலிபெர்த். "ஒருவகையில் இது என்னை சங்கடப்படுத்துகிறது. ஏனென்றால் இஸ்லாம் என்பது ஒரு மதம்.

என்னைப்போன்ற பெண்ணியவாதிகளுக்கு மதம் என்பது ஆண்கள் உருவாக்கி, ஆண்கள் ஒழுங்குபடுத்தி ஆண்கள் தலைமை தாங்கும் அமைப்பு. ஏற்கத்தக்கது, கண்ணியமானது என்று ஆண்கள் அழைக்கும் நடத்தையை அவர்கள் பெண்கள் மீது திணிக்கப் பார்க்கிறார்கள்", என்று சாடுகிறார் மேரி.
 
ஆனால் இத்தகைய வாதங்கள் மெஸ்தாவி சகோதரிகளுக்கு எரிச்சலூட்டுகின்றன. மதசார்பற்ற பிரான்ஸ் தம்மை மூச்சுமுட்டச் செய்வதாகவும் சதாகாலமும் விதிகளுக்கு கட்டுப்படும்படி வற்புறுத்துவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
 
“எல்லோரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இங்கிருக்கும் நடைமுறையை ஏற்காவிட்டால் இதற்குள் நீங்கள் வராவிட்டால் நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள். தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுவீர்கள்", என்கிறார்கள் மெஸ்தாவி சகோதரிகள்.
 
இஸ்லாமிய ஃபாஷனுக்கேற்ற பாரிஸின் பிரத்யேக உடைகளை அணியும் சுகத்தை பிரெஞ்சு முஸ்லிம் பெண்கள் ஏன் அனுபவிக்கக்கூடாது? பெணளின் உடைகள் ஏன் மதத்துக்கு தலைவணங்க வேண்டும்? இதுவே இங்கே தொடரும் விவாதம்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்