இந்திய - இலங்கை மீனவர் பிரச்னை: படகு கடலில் மூழ்கியது' - இலங்கை கடற்படை

புதன், 20 ஜனவரி 2021 (00:22 IST)
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து, மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகொன்று யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
 
இந்த சம்பவம் ஜனவரி 18 பின்னிரவில் இடம்பெற்றுள்ளதாக இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டர் இந்திக்க டி சில்வா, பிபிசி தமிழிடம் கூறினார்.
 
நெடுந்தீவிலிருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சுமார் ஐம்பதிற்கும் அதிகமான படகுகள் வருகைத் தந்துள்ளதாக இலங்கை கடற்படையால் தெரிவிக்கப்படுகின்றது.
 
இவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் வருகைத் தந்த படகுகளையும், மீனவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தாங்கள் நேற்று முன்னெடுத்ததாகவும் அவர் கூறுகின்றார்.
 
இதன்போது,தங்களிடமிருந்து தப்பிக்கும் நோக்குடன், இந்திய மீனவர்கள் தமது படகுகளை செலுத்த முயற்சித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
 
இலங்கை கடற்பரப்பிற்குள் வருகைத் தரும் இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையிடமிருந்து தப்பிச் செல்வதற்காக, இலங்கை கடற்படையின் படகுகளை மோதி சேதப்படுத்துவது வழக்கமானது என அவர் கூறுகின்றார்.
 
 
இவ்வாறே, நேற்றைய தினமும் தமது படகுகளை சேதப்படுத்தி தப்பிச் செல்ல முயற்சித்த வேளையில், குறித்த இந்திய மீனவர்களின் படகு கடலில் கவிழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
 
இந்த விபத்து நேரும் சந்தர்ப்பத்தில் இருள் சூழ்ந்திருந்தமையினால், தேடுதல்களை நடத்துவதில் சற்று தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
 
எவ்வாறாயினும், குறித்த பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
 
கடற்படையின் சூழியோடிகள் குழு, கடற்படை படகுகள் மற்றும் கப்பல்கள் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கடற்படை கூறுகின்றது.
 
இந்த சம்பவத்தில் தமது படகிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.
 
இந்திய - இலங்கை மீனவர் பிரச்னை
 
விபத்துக்குள்ளான படகில் எத்தனை பேர் இருந்தனர் என பிபிசி தமிழ், இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளரிடம் வினவியது.
 
இலங்கைக்குள் சட்டவிரோதமாக வருகைத் தந்தமையினால், குறித்த படகில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தொடர்பான தகவல்கள் தம்வசம் கிடையாது என அவர் பதிலளித்தார்.
 
எனினும், இந்தியாவிலிருந்து நேற்றைய தினம் கடற்றொழிலுக்காக சென்றவர்களில், நால்வர் மீண்டும் தமது நாட்டிற்கு திரும்பவில்லை என இந்திய அதிகாரிகள், தமக்கு அறிவித்துள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
 
இதன்படி, இந்த படகில் குறித்த நால்வரும் இருந்திருக்கலாம் என கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா சந்தேகம் வெளியிட்டார்.
 
அத்துடன், கடலில் மூழ்கியதாக கூறப்படும் இந்திய மீனவர்களின் படகும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
 
எவ்வாறாயினும், தாம் தொடர்ச்சியாக குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்