"மொத்தமாக 4,400 கோடி டாலர் தருகிறேன்" - விலகி ஓடிய ட்விட்டரை ஈலோன் மஸ்க் கவர்ந்து இழுத்த கதை!
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (13:18 IST)
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு உலகின் மிகப்பெரிய பணக்காரரான ஈலோன் மஸ்க் வாங்குகிறார். முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தை வாங்க ஈலோன் மஸ்க் முன்வந்தார். அதனை தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
ட்விட்டர் இயக்குநர் வாரியம் - ஈலோன் மஸ்க் இடையே நேற்று நடந்த நீண்ட நேர பேச்சுவார்த்தையில் இந்த ஈலோன் மஸ்கின் இந்த பேரத்தை ட்விட்டர் நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர். ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்கையும், தலா ஒரு பங்கு 54.20 டாலர் என்ற விலைக்கு வாங்க உள்ளார் ஈலோன் மஸ்க். ட்விட்டரில் 9.2% பங்குகளை வைத்துள்ள ஈலோன் மஸ்க் அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக தற்போது உள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு ஈலோன் மஸ்க் இரு வாரங்களுக்கு முன்னதாக விருப்பம் தெரிவித்திருந்தார். அப்போது, ட்விட்டர் "மிகச்சிறந்த திறன்களை" கொண்டிருப்பதாகவும் அதனை தான் வெளிக்கொண்டு வரவிரும்புவதாகவும் தெரிவித்திருந்தாrர்.
மேலும், ட்விட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவருவது குறித்தும் அவர் அண்மைக் காலமாக கருத்து வெளியிட்டு வந்தார். அதில், ட்விட்டரில் பதிவுகள் சிலவற்றுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துதல் மற்றும் போலி ட்விட்டர் கணக்குகளை நீக்குதல் உள்ளிட்டவை அடங்கும்.
ட்விட்டர் நிறுவனத்தை அதன் விருப்பத்துக்கு மாறாக கையகப்படுத்தும் ஈலோன் மஸ்க்கின் முயற்சியை அந்நிறுவனம் தடுக்க முயன்றது. ஈலோன் மஸ்க் ட்விட்டரை விழுங்குவதை தடுப்பதற்காக "விஷ மாத்திரை உத்தி" என்ற ஒன்றை கையாளப் போவதாகவும் அது அறிவித்திருந்தது. ஆனால், உரிய முறையில் பேரம் நடத்தினால், அதை ஏற்பதற்கான விருப்பத்தையும் ட்விட்டர் நிர்வாகம் வெளிப்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான ஈலோன் மஸ்க்கின் பேரத்தை ஏற்றுக்கொள்ள வாக்களிக்குமாறு அந்நிறுவனம் பங்குதாரர்களை கேட்க உள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை ஈலோன் மஸ்க் எப்படி வாங்குவார்?
ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 37 பில்லியன் டாலர்கள் (3,700 கோடி டாலர்கள்). இதை மொத்தமாக 44 பில்லியன் டாலர் (4,400 கோடி டாலர்) விலைக்கு வாங்கிக் கொள்வதாக ஒரு ஜாக்பாட்டை அறிவித்தார் மஸ்க். இந்த பேரத்தை ட்விட்டர் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, ஈலோன் மஸ்க் கையகப்படுத்துவதை தடுக்கும் வகையில் அமல்படுத்த இருந்த விஷ மாத்திரை உத்தியை கைவிடவும் ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
"மொத்தமாக 44 பில்லியன் டாலர் தருகிறேன்"
"மொத்தமாக ரொக்கமாக இப்போதே 44 பில்லியன் டாலரை தருகிறேன்" என்றும் குறிப்பிட்ட மஸ்க், இதற்காக வங்கிகளில் கடன் வாங்க முடிவு செய்தார். அதன்படி 21 மில்லியன் டாலரை தனது சொந்த பணத்தில் இருந்து கொடுக்கிறார். இது போக மீதம் உள்ள தொகையை டெஸ்லா பங்கு, ட்விட்டர் பங்கு ஆகியவற்றின் மீது கடன் வாங்குகிறார் மஸ்க்.
விளைவு அவரின் கைக்கு மொத்தமாக 44 பில்லியன் ரொக்கம் வந்தது. சந்தை மதிப்பை விட அவர் கூடுதல் விலை தர தயாராக இருந்ததால், அதையும் ரொக்கமாக உடனே கொடுக்க தயாராக இருந்ததால், மீண்டும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கூடி ஆலோசனை செய்தனர்.
ஆலோசனையின் முடிவில், விஷ மாத்திரை முறையை ஓரமாக வைத்துவிட்டு மஸ்க் கொடுத்த ஆஃபரை ஏற்றுக்கொண்டனர் போர்ட் உறுப்பினர்கள். நேற்று 10 மணி நேரத்திற்கும் மேல் நடந்த ஆலோசனைகளுக்குப் பின் கடைசியில் ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றும் ஈலோன் மஸ்க்கின் டீல் வெற்றி முகட்டைத் தொட்டது. 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை ஈலோன் மஸ்க் வாங்க முடிவானது.
ட்விட்டரில் என்ன செய்ய உள்ளார் மஸ்க்?
ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட பட்டியலின்படி, உலகிலேயே மிகவும் பணக்காரராக ஈலோன் மஸ்க் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 273.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இது பெரும்பாலும், அவர் நடத்திவரும் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளால் உருவானது ஆகும். விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தையும் ஈலோன் மஸ்க் நடத்திவருகிறார்.
"ஜனநாயகத்தின் அடிப்படை தத்துவமாக பேச்சு சுதந்திரம் உள்ளது. மானுட எதிர்காலம் குறித்த அத்தியாவசிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் டிஜிட்டல் பொதுத்தளமாக ட்விட்டர் உள்ளது," என, ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்த அறிவிப்பில் ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
"புதிய அம்சங்கள் மூலம் மேம்படுத்துதல், ட்விட்டர் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் அதன் நெறிமுறைகளை உருவாக்குதல், ஸ்பேம்களை அகற்றுதல் மற்றும் அனைத்து மனிதர்களையும் அங்கீகரிப்பது போன்றவற்றின் மூலம், முன்பிருந்ததைவிட ட்விட்டரை சிறந்த நிறுவனமாக மாற்ற விரும்புகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
"ட்விட்டர் மிகச்சிறந்த திறன்களை கொண்டுள்ளது. அவற்றை வெளிக்கொண்டுவரும் வகையில் அந்நிறுவனம் மற்றும் ட்விட்டர் பயனர்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து எதிர்நோக்குகிறேன்" என ஈலோன் மஸ்க் தன் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் வெளியாகும் சில கருத்துகள் காரணமாக அரசியல்வாதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் மத்தியில் அதிக அழுத்தத்தை ட்விட்டர் சந்தித்துவந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் வெளியாகும் தவறான தகவல்கள் குறித்து அந்நிறுவனம் இணக்கமாக செல்வதாக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.
கடந்த ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கணக்கை ட்விட்டர் தடை செய்தது. அவர் அதிக செல்வாக்குமிக்க ட்விட்டர் பயனராக இருந்தபோதும் அவருடைய பதிவு, "வன்முறையை தூண்டுவதாக" கூறி தடை செய்தது.
ட்விட்டரின் புதிய 'அரசர்' ஈலோன் மஸ்க்
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதன் மூலம் அந்நிறுவனத்தின் முழு 'அரசராக' ஈலோன் மஸ்க் ஆகிறார்.
இது "பொருளாதாரம்" பற்றியது அல்ல என ஏற்கெனவே தெரிவித்திருந்த ஈலோன் மஸ்க், அதிகாரம் மற்றும் செல்வாக்கு குறித்தது என கூறியிருந்தார்.
ட்விட்டர் நிறுவனம், கூட்டுப் பங்கு நிறுவனம் என்ற நிலையில் இருந்து தனியார் நிறுவனமாவதன் மூலம் அதன் மீதான முழு கட்டுப்பாடும் ஈலோன் மஸ்க் வசம் செல்லும்.
அந்நிறுவனத்தில் தான் என்ன செய்ய விரும்புகிறாரோ, அதனை மேற்கொள்வதற்கான அதிகாரம் ஈலோன் மஸ்க்குக்கு வரும்.
மேலும், ட்விட்டர் நெறிமுறைகள் பொதுத்தளத்தில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் மூலம், ட்விட்டர் எப்படி இயங்குகிறது என்பதை மக்கள் அறிந்துகொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.
டிரம்ப் மீண்டும் வர வாய்ப்பு
இந்த நடவடிக்கை டொனால்ட் டிரம்ப் ட்விட்டருக்கு மீண்டும் திரும்புவதற்கான கதவைத் திறந்து விடுகிறது, இருப்பினும் அவர் தனது சொந்த சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியலைப் பயன்படுத்த விரும்புவதாகத் தெரிகிறது.
பல ஆண்டுகளாக பழமைவாதிகள் ட்விட்டர் தங்களுக்கு எதிராக ஒரு சார்புடையது என்று தெரிவித்து வந்தனர். மேலும் இந்த செய்தி அமெரிக்காவில் உள்ள குடியரசுக் கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.