'மருத்துவமனை செய்த தவறால் இன்னொருவரின் கருவைச் சுமந்தேன்'

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (13:39 IST)
கருத்தரிப்பு மருத்துவமனை ஒன்று செய்த தவறின் காரணமாக வேறு ஒருவரின் கருவை சுமக்க நேர்ந்த அமெரிக்கப் பெண், அதற்குக் காரணமான செயற்கை கருவூட்டல் மையம் மற்றும் ஆய்வகத்தின் மீது தமது கணவருடன் சேர்ந்து வழக்கு தொடுக்க தீர்மானித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த டஃப்னா கார்டினேல் மற்றும் அலெக்சாண்டர் கார்டினேல் தம்பதிக்கு செப்டம்பர் 2019ஆம் ஆண்டு குழந்தை ஒரு பெண் குழந்தை பிறந்தது.
 
ஆனால் அந்தப் பெண் குழந்தை வெள்ளை இனத்தைச் சேர்ந்த அவர்களை போல் இல்லாமல் அடர் நிறத் தோலுடைய பெண் குழந்தையாக இருந்தது. இதனால் உண்டான சந்தேகத்தின் பேரில் அவர்கள் செய்த டிஎன்ஏ பரிசோதனை அது அவர்கள் குழந்தை அல்ல என்று உறுதி செய்தது.
 
In vitro fertilization என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வெளிச் சோதனை முறை கருக்கட்டலின் போது பெண்ணின் கருமுட்டையில் ஆணின் விந்தணு செலுத்தப்பட்டு ஆய்வகத்தில் கரு உருவாக்கப்படும். பின்பு அந்தக் கரு பெண்ணின் கருப்பையில் வைக்கப்படும்.
 
கலிஃபோர்னியாவை சேர்ந்த சென்டர் ஃபார் ரீப்ரொடக்டிவே ஹெல்த் எனும் செயற்கை கருவூட்டல் மையத்தில் கருத்தரிப்பு செய்துகொண்டார் டஃப்னா. இந்த கருக்கட்டல் இன் விட்ரோ டெக் லேப்ஸ் எனும் ஆய்வகத்தில் செய்யப்பட்டது.
 
ஆனால் கவனக் குறைவின் காரணமாக வேறு ஒரு தம்பதியின் கரு டஃப்னா கருப்பையிலும், டஃப்னா - அலெக்ஸாண்டர் தம்பதியின் கரு வேறு ஒரு பெண்ணின் கருப்பையிலும் செலுத்தப்பட்டது.
 
மருத்துவ முறைகேடு, கவனமின்மை, மோசடியாக உண்மையை மறைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் கலிஃபோர்னியா சென்டர் ஃபார் ரீப்ரொடக்டிவே ஹெல்த் எனும் அந்தக் கருவூட்டல் மையம் மற்றும் இன் விட்ரோ டெக் லேப்ஸ் எனும் ஆய்வகம் ஆகியவற்றின் மீது இது தற்போது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
 
காட்டினேல் தம்பதியினர் திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய பொழுது, தங்கள் குடும்பம் மனம் உடைந்தது மற்றும் குழப்பத்துக்கு உள்ளானது ஆகியவற்றைப் பிறரால் புரிந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
 
"எங்களது குழந்தையை என்னால் சுமக்க முடியவில்லை. நான் சுமந்து பெற்ற குழந்தையை என்னுடன் வைத்துக்கொள்ள முடியவில்லை," என்று கண்ணீருடன் கூறினார் டஃப்னா.
 
"எனது சொந்தக் குழந்தையை சுமக்கும் வாய்ப்பு என்னிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது," என்று அவர் வருந்தினார்.
 
ஒரு வாரத்துக்கு பின்...
 
டஃப்னா மற்றும் அலெக்ஸாண்டர் தம்பதி 2018ஆம் ஆண்டு இந்த செயற்கை கருவூட்டல் மையத்தை அணுகியுள்ளனர். அடுத்த ஆண்டு அவர்களுக்கு குழந்தை பிறந்தது. இரண்டு மாத காலத்திற்கு பிறகு அது தங்களது குழந்தை இல்லை என்பதை உறுதி செய்தனர்.
 
பின்னர் தவறுக்கு காரணமான அந்த செயற்கை கருவூட்டல் மையமே இந்த தம்பதியின் உண்மையான குழந்தையை சுமந்த வேறொரு தம்பதியை அடையாளம் காண உதவியது.
 
டஃப்னா மற்றும் அலெக்ஸாண்டர் தம்பதிக்கு மகப்பேறு நிகழ்ந்த ஒரு வாரத்துக்கு பின் அடையாளம் வெளியிடப்படாத அந்தத் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
 
பல சந்திப்புகளுக்குப் பிறகு ஜனவரி 2020இல் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் இரண்டு தம்பதியினரும் தாங்கள் பெற்ற குழந்தைகளை மாற்றிக் கொள்ள முடிவு செய்தனர்.
 
"என்னுடைய குழந்தைக்குப் பாலூட்டுவதற்கு பதில் நான் வேறு ஒரு குழந்தைக்கு பாலூட்டினேன். அதன் மூலம் அந்தக் குழந்தையுடன் எனக்கு ஒரு பிணைப்பு ஏற்பட்டது. ஆனால் அதை வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் எனக்கு உண்டானது," என்று டஃப்னா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
 
தமது மூத்த மகளான ஏழு வயது சிறுமிக்கு தம்மைச் சுற்றி நடப்பது என்ன, ஏன் இவர்கள் குழந்தையை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை புரிய வைக்க மிகவும் கடினமானதாக இருந்தது என்று அவர் தெரிவித்தார்.
 
இந்த நிகழ்வுக்குப் பிறகு கார்டினேல் தம்பதியினர் மனநல சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
 
டஃப்னா - அலெக்ஸாண்டர் தம்பதியின் குழந்தையை பெற்றெடுத்த தம்பதியும் செயற்கை கருவூட்டல் மையம் மற்றும் ஆய்வகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
 
2019ஆம் ஆண்டில் இதே போல கலிஃபோர்னியாவை சேர்ந்த தம்பதியினர் ஒருவர் தங்களது குழந்தை நியூயார்க்கில் பிறந்ததைக் கண்டறிந்தனர்.
 
ஆனால் அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்த பெண் இவர்களது குழந்தையை விட்டு பிரிய மனமில்லாமல் இவர்களிடம் திரும்ப ஒப்படைக்க மறுத்தார். ஆனால் நீதிமன்றம் மரபணு ரீதியான பெற்றோருக்கே குழந்தை சொந்தம் என்று தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்