ஆள் கடத்தல் புகாரில் ஆளுங்கட்சி எம்.பி. உள்பட 9 பேருக்கு நிபந்தனை பிணை

வியாழன், 22 செப்டம்பர் 2016 (01:44 IST)
நபர் ஒருவரை கடத்திச் சென்றமை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருநிக்கா பிரேமசந்திர உள்பட ஒன்பது நபர்களை கடும் நிபந்தனைகள் கொண்ட பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பு தெமட்டகொட பகுதியில் தனது உத்தியோகபூர்வ வாகனத்தை பயன்படுத்தி நபர் ஒருவரை கடத்திச் சென்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருநிக்கா பிரேமசந்திர உள்பட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
 
அந்த வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது ஹிருநிக்கா பிரேமசந்திர உள்பட சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்த நீதிபதி அவர்களின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்யுமாறு உத்தரவிட்டார்.
 
அதேபோன்று சாட்சியாளர்களை அச்சுறுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சந்தேக நபர்கள் மீது உத்தரவு பிறப்பித்த நீதிபதி, இவ்வாறான புகார்கள் முன்வைக்கப்பட்டால் பிணை ரத்துச் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிவடையும் வரை தடுப்பு காவலில் வைக்கப்படுவார்கள் எச்சரித்தார்.
 
வழக்கு விசாரணை அடுத்த ஜனவரி மாதம் பத்தாம் தேி வரை ஒத்திவைக்கப்பட்டது.
 
ஆனால் தான் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருநிக்கா பிரேமசந்திர ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்