பிரான்சில் ஈயை கொல்வதற்காக வீட்டையே எரித்த தாத்தா

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (13:58 IST)
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியுமா என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
 
அது பிரான்சில் உண்மையாகவே நடந்துள்ளது. ஆனால் ஒரு சிறிய வேறுபாடு. மூட்டை பூச்சிக்கு பதிலாக ஈ. பிரான்ஸ் நாட்டில் உள்ள பார்கோ -செர்னோ எனும் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் ஈயை அடித்துக் கொல்லும் முயற்சியில் தனது வீட்டின் ஒரு பகுதியை எரித்துள்ளார்.
 
80 வயதாகும் அந்த முதியவர் இரவு உணவு உண்ண சென்ற நேரத்தில், அவரைச்சுற்றி ஈ ஒன்று பறந்து கொண்டே இருந்திருக்கிறது. அந்த ஈயின் ரீங்கார சத்தம் அவருக்கு கோபத்தை தூண்டவே அதை பூச்சிகளைக் கொல்லும் மின்சார பேட் ஒன்றின் மூலம் கொல்லலாம் என்று அவர் முடிவு செய்துள்ளார்.
 
ஆனால் அந்த சமயத்தில் அவரது வீட்டிலிருந்த எரிவாயு சிலிண்டரில் கசிவு நிகழ்ந்துள்ளது. மின்சார பேட்டை இவர் பயன்படுத்த தொடங்கிய போது ஏற்கனவே இருந்த எரிவாயு கசிவால் அந்த இடத்தில் ஒரு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
 
இதில் அவரது வீட்டின் சமையலறை முற்றிலும் அழிந்துவிட்டது. வீட்டின் மேல் கூரையும் கணிசமான சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. உள்ளூர் ஊடகங்களில் செய்தியில் கையில் தீக்காயங்களுடன் அந்த முதியவர் உயிர் தப்பி விட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் அந்த ஈ என்ன ஆனது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. தற்போது அந்த ஊரிலேயே வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் அவரது வீட்டை புனரமைப்பு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்