அரசு அலுவலகங்கள் முதல் ரயில்கள் வரை - தொடரும் இந்தி எழுத்து அழிப்பு சம்பவங்கள்

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (21:45 IST)
தினத்தந்தி: 'அரசு அலுவகங்கள் முதல் ரயில்கள் வரை - தொடரும் இந்தி எழுத்து அழிப்பு சம்பவங்கள்'
திருச்சி ரயில் நிலைய நடைபாதை மேம்பாலம் மற்றும் ரயிலில் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளது. தொடரும் சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
 
"மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் இந்தி மொழி கட்டாயம் படிக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அதனை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற்று, 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்து விருப்பப்பட்டு அதனை படிக்கலாம் என்று தெரிவித்தது.
 
இந்நிலையில், இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களான தலைமை தபால் நிலைய அலுவலகத்தின் பெயர் பலகை, தபால் பெட்டிகள், பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் பெயர் பலகை, விமான நிலையத்தின் வெளியே அறிவிப்பு பலகை ஆகியவற்றில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகள் கருப்பு மையினால் அழிக்கப்பட்டிருந்தது. திருச்சியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், திருச்சி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் நடை மேம்பாலத்திலுள்ள தகவல் பலகை மற்றும் அதே நடைபாதை மேம்பாலத்தில் 6, 7-வது நடைமேடைக்கு இறங்கும் இடத்தில் உள்ள பலகையிலும் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளன" என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்