கொரோனா வைரஸ்: பிரேசிலில் இறந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது - என்ன நடக்கிறது அங்கே?
திங்கள், 22 ஜூன் 2020 (13:34 IST)
அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசிலில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கோவிட் 19 நோய் தொற்றால் பலியாகி உள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி இதுவரை 50,591 பேர் பிரேசிலில் பலியாகி உள்ளனர்.
பிரேசிலில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அரசு உறுதி செய்ததை அடுத்து இந்த மரண எண்ணிக்கை வெளியாகி உள்ளது.
ஆனால், பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். அங்கு குறைவான அளவிலேயே பரிசோதிக்கப்படுவதாக கூறுகிறார்கள் அவர்கள்.
இப்படியான நிலையில் பிரேசில் அதிபரி சயீர் பொல்சனாரூவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் மக்கள் வீதியில் திரண்டனர்.
அதிபரின் எதிர்ப்பாளர்கள் சயீர் பொல்சனாரூ விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனக் கோருகிறார்கள். சயீர் பொல்சனாரூவின் குடும்ப நண்பரும் முன்னாள் உதவியாளருமான ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பொல்சனாரூவையும் விசாரிக்க வேண்டும் என்பது எதிர்ப்பாளர்களின் கோரிக்கை.
பொல்சனாரூவின் ஆதரவாளர்கள் காங்கிரஸும், உச்ச நீதிமன்றமும் அதிபரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த முயல்வதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
விமர்சனம் மற்றும் பதவி விலகல்
கொரோனா வைரஸ் விவகாரத்தை முறையாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளார் பொல்சனாரூ.
அவர் பொது முடக்கத்திற்கு எதிராக இருந்தார், தனது அரசின் சுகாதார அமைச்சரின் ஆலோசனைகளைப் புறந்தள்ளினார்.
கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகளைவிட அதனை எதிர்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகள் மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பொல்சனாரூவின் வாதம்.
பொல்சனாரூ எடுத்த நடவடிக்கைகளில் முரண்பட்டு இரண்டு சுகாதார அமைச்சர்கள் இதுவரை அங்கு பதவி விலகி உள்ளனர்.
சமூக முடக்கம்
பிரேசிலில் தேசிய அளவில் பொது முடக்கம் அமல்படுத்தப்படவில்லை. மாகாணங்கள், நகரங்களின் தேவைக்கு ஏற்றார் போல சமூக முடக்கத்தையும், பிற கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.
இப்போது மெல்ல அவையும் தளர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால், அங்கு கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை ஏறுமுகமாகவே உள்ளது.
இச்சூழலில் அவர் மீது வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
அரசியல் காரணங்களுக்காக போலீஸ் விசாரணைகளில் தலையிட்டதாக எழுந்துள்ள ஒரு குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். உச்ச நீதிமன்றம் பொல்சனாரூவின் நண்பர்கள் குறித்த இரு வேறு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.