கோவை காரில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்டதாக கருதப்படும் சம்பவத்தில் உயிரிழந்த நபர் ஜமேஷா முபின் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், அவருடைய வீட்டில் சோதித்தபோது, நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், கந்தகம் போன்ற பொருள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு "கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஜமேஷா முபின் என்பது தெரியவந்துள்ளது. அவருடைய வீட்டை சோதனை செய்தபோது அழுத்தம் குறைவான நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான கோலி குண்டு, பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், கந்தகம் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தடய அறிவியல் துறையினர் தடயங்களைச் சேகரித்துள்ளனர். காரில் ஆணி இருந்துள்ளது. அவர் பயணம் செய்து வந்த கார் 9 பேர் கைமாறி உள்ளது. காவல்துறை துரிதமாக செயல்பட்டு அனைவரையும் கண்டறிந்துள்ளது. இவர் மீது முன்பு வழக்குகள் எதுவும் இல்லை. அவருடைய செல்போன் தரவுகளை ஆராய்ந்து யாரிடம் அதிகம் பேசியுள்ளார் என்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து வருகிறோம்" என்றார் சைலேந்திர பாபு.
இவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு என்.ஐ.ஏ சோதனை நடத்தியிருந்த போதும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே காவல்துறை சோதனை சாவடி இருந்ததால் அங்கே அவர் ஒதுங்கி உள்ளார். அப்போது தான் சிலிண்டர் வெடித்து விபத்து நடந்துள்ளது. எனினும் இது தற்செயலாக நடந்த விபத்தா அல்லது குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார். ஜமேஷா முபின் எந்த அமைப்பையும் சார்ந்தவர் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்."இந்த வழக்கின் விசாரணையிலும் எந்த அமைப்பும் பின்னணியும் இல்லை. இவர் தனிநபராக செயல்பட்டாரா அல்லது வேறு திட்டங்கள் ஏதும் இருந்ததா என விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை மாநகர காவல்துறையே துரிதமாக செயல்பட்டு வருவதால் என்.ஐ.ஏ விசாரணை தேவையில்லை. தீபாவளி பண்டிகையை ஒட்டி கோவையில் ஏற்கனவே செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன" என்றும் கூறினார் சைலேந்திர பாபு.