அதிமுக உட்கட்சி தேர்தல்: ஓ.பி.எஸ், இபிஎஸ் இடையே வாக்குவாதம் - நடந்தது என்ன?

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (13:31 IST)
இன்றைய (07.04.2022) நாளிதழ் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

அதிமுக உட்கட்சி தேர்தல்: ஓ.பி.எஸ், இபிஎஸ் இடையே வாக்குவாதம்

அதிமுக உட்கட்சித் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் இருதரப்பாகப் பிரிந்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து அதிமுக அமைப்புத் தேர்தல், டிசம்பர் 13 முதல் 23-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில், ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், மாநகராட்சி வட்ட நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து சமீபத்தில் அடுத்த கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. அடுத்தகட்ட தேர்தல்கள் குறித்தும் செயற்குழு, பொதுக்குழு கூட்டுவது குறித்துமான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது.

அப்போது, மாவட்டச் செயலாளர்கள் பலர் தங்கள் ஆதரவாளர்களை நியமித்திருப்பதும் அதில் பெரும்பாலானோர் பழனிசாமி ஆதரவாளர்களாக இருப்பதும் ஓபிஎஸ் தரப்புக்கு தெரிந்ததால், நிர்வாகிகள் நியமனத்துக்கான ஒப்புதல் கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் கையொப்பமிட மறுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஓபிஎஸ், பழனிசாமி தரப்பு நிர்வாகிகள் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று தேனி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியது தொடர்பாகவும் பேச்சு எழுந்தது. கூட்டத்தில் நிர்வாகிகள் சிலர் அதை வலியுறுத்தியதால், பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில், துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஆர்.வைத்திலிங்கம் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே கோபமாக வெளியேறினார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருதரப்பையும் சில நிர்வாகிகள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய கூட்டம், இரவு 9 மணியை கடந்தும் தொடர்ந்தது," என அந்தச் செய்தி கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்