ஆப்கானிஸ்தான்: காபுல் பள்ளியில் குண்டுவெடிப்புகள் - பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (15:09 IST)
ஆப்கானிஸ்தானின் மேற்கு காபுலில் இன்று, ஏப். 19 அன்று, உயர்நிலைப்பள்ளி ஒன்றில் மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும், ஆப்கன் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.


இப்பகுதிக்கு அருகாமையில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர், மத மற்றும் இன சிறுபான்மையினரான ஷியா ஹசாரா சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள், சன்னி தீவிரவாத குழுக்களால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவர்களாவர்.

"உயர்நிலைப்பள்ளியில் மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. ஷியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இதில் உயிரிழந்துள்ளனர்" என, காபுல் கமாண்டரின் செய்தித்தொடர்பாளர் காலித் ஸத்ரான் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் குறைந்தது 4 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும், 14 பேர் காயமடைந்திருக்கலாம் எனவும், பெயர் தெரிவிக்க விரும்பாத மருத்துவமனை ஒன்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் தெரிவித்துள்ளதாக, ராய்ட்டர்ஸ் முகமை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இன்னும் எந்த தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை.

இதனிடையே, அப்துல் ரஹீம் ஷாஹித் உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ள ஏ.பி. செய்தி முகமை, இத்தாக்குதலில் 7 குழந்தைகள் வரை காயமடைந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்