ஐடிபிபி வீரர்களுக்கு 5 வயது லடாக்கிய சிறுவன் அளிக்கும் அணிவகுப்பு - வைரலாகும் காணொளி

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (09:09 IST)
லடாக்கில் ஐந்து வயது சிறுவன், இந்திய துணை ராணுவ படைகளில் ஒன்றான இந்திய-திபெத்திய காவல் படைக்கு ராணுவ ரீதியிலான மரியாதை செலுத்திய காணொளி இணையத்தில் வைரலானதையடுத்து, அந்த சிறுவனை அழைத்து அந்த படையின் அதிகாரிகள் கெளரவித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள், தங்களைப் பார்த்து ஐந்து வயது சிறுவன், ராணுவ வீரரை போல வணக்கம் செலுத்துவதை பார்த்து ஆச்சரியப்பட்டு வாகனத்தை நிறுத்திப் பேசினர்.

பிறகு ஒரு அதிகாரி, "இப்படி கால்களை அகற்றியும் சேர்த்தும் வணக்கம் செய்ய வேண்டும்" என அறிவுறுத்த, அதை அப்படியே செய்து, நேர்த்தியாக அந்த சிறுவன் வணக்கம் செலுத்தும் காட்சி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதும் அந்த காட்சி வைரலானது.

இந்த நிலையில், லட்சக்கணக்கான சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்து, தேசப்பற்றை வெளிப்படுத்தவும் ஐடிபிபியின் சேவை தொடர்பான தகவல்களை பலரும் பகிரவும் அந்த சிறுவனின் செய்கை காரணமானது.

இந்த நிலையில், நவாங் நம்கியால் என்ற அந்த சிறுவனை, தங்களுடைய பிராந்திய படை முகாமுக்கு ஞாயிற்றுக்கிழமை வரவழைத்த அதிகாரிகள், அந்த சிறுவனுக்கு ஏற்றவாறு ஐடிபிபி ராணுவ சீருடையை வடிவமைத்து வழங்கினார்கள்.

அதை அணிந்து கொண்டு, அங்குள்ள அணிவகுப்பு மைதான சாலையில், சிறுவன் கம்பீரத்துடன் அணிவகுத்து வருவதையும், வணக்கம் செலுத்தும் காணொளியையும் ஐடிபிபி தலைமையகம் தனது அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது.

லடாக்கின் சிசூல் என்ற இந்திய எல்லையோர கிராமத்தில், சிறுவன் நம்கியால், தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். உள்ளூர் மழலையர் பள்ளியில் படிக்கும் சிறுவனுக்கு ஆரம்பம் முதலே படையினரின் மீது அளவற்ற மரியாதை உண்டு என அவனது பெற்றோர் கூறுகின்றனர்.

இந்த சிறுவனின் காணொளியை பார்த்த பல சமூக ஊடக பயனர்களும், "அழகான வீரன்", "இந்தியாவின் எதிர்கால வீரன்", "ஒரு வீரன் உருவாகிறான்" போன்ற வரிகளை பதிவிட்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்