ராமனை காட்டுக்கு அனுப்புமாறு கைகேயி கேட்டது சரியா?

சனி, 15 பிப்ரவரி 2014 (15:32 IST)
நமது நாட்டின் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் திருப்புமுனையான நேரம், ராமன் காட்டிற்குச் சென்றதுதான். ராமனின் தந்தையான தசரதனிடம், அவரது இரண்டாவது மனைவியும், ராமன் மேல் அதுவரை உயிரையே வைத்திருந்தவளுமான கைகேயி கேட்ட வரத்தினாலேயே அந்த சம்பவம் நடந்தது.
FILE

காட்டிற்குச் சென்றதன் மூலம் ராமாவதாரத்தின் நோக்கம் நிறைவேறியதாகச் சொல்லப்பட்டாலும், கைகேயியின் செயலை வைத்து மாற்றாந்தாய்களை இதுவரை நாம் விமர்சித்து வருகிறோம். ஆனால் கைகேயியின் செயலுக்கு காரணம், மாந்தாரை என்ற கூனி காரணம் அல்ல. இஷ்வாகு குலத்தின் மேல் கைகேயிக்கு இருந்த பற்றும், ராமன் மீதான தாய்ப்பாசமே காரணம் என்கிறது ராஜஸ்தான் மாநிலத்தில் வழங்கப்பட்டு வரும் ஒரு ராமாயணம்.

கண்ணாடியில் நரைமுடி தெரிந்ததால், உடனடியாக ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்துவிட வேண்டும் என்று தசரதன் துடித்தார். மறுநாளே சுபமுகூர்த்த தினம் என்பதால், பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்தும் விடுகிறார். அதன் பிறகே இந்தத் தகவல் அரண்மனை ஜோதிடருக்குத் தெரிய வருகிறது.

அரச குலத்தவர்களின் ஜாதகங்கள் அவருக்கு அத்துப்படியானதால் அதிர்ச்சியடைகிறார். மறுநாள் நல்ல நாள்தான் என்றாலும், ராமனுக்கு பட்டாபிஷேகத்திற்கு உகந்த நாள் அல்ல. வயோதிகத்தை எட்டிய தசரதனின் மரணம் முடிவானதுதான். ஆனால் ராமன் பட்டாபிஷேகம் ஏற்பதற்குரிய நாள் இது அல்ல. மீறி ஏற்றால் ராமனுக்கு அபசகுனமாகி விடும். அத்துடன் இஷ்வாகு வம்சமே நாசமாகிவிடும். இந்த செய்தி தெரிந்ததால், ஜோதிடர் அதிர்ச்சி அடைகிறார்.

தசரதனிடம் ‘நாளை மாற்றி வைக்கலாமே?’, ‘ராமனுக்கு வயசாகவில்லையே?’ என்றெல்லாம் கேட்டு மனதை மாற்றி முயற்சிக்கிறார் ஜோதிடர். ஆனால், உண்மையான காரணத்தை சொல்ல முடியாமல் தவிக்கிறார். நல்ல பேச்சில் அபசகுனமான வார்த்தை அரசருக்குப் பிடிக்காது என்பது புரிந்து அதைச் சொல்லாமல் இருக்கிறார். புத்திர பாசத்தில் இருந்த தசரதன் கேட்பதாக இல்லை. ‘நாள் குறித்தாகிவிட்டது. அரசு உத்தரவு’ என்று சொல்லிவிடுகிறார்.

தனது வீட்டிற்குச் சென்ற ஜோதிடர் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார். மீண்டும் அரச குடும்ப ஜாதகங்களை ஆராய்கிறார். கைகேயி சிறந்த மதியூகி. ராமன் பட்டாபிஷேகத்தைத் தடுத்து நிறுத்தும் திறன் அவளுக்கே உண்டு என்ற முடிவுக்கு வருகிறார். ஜாதகங்களும் அதற்குரிய வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. ஒருவேளை கைகேயியும் ஜோதிடரின் பேச்சுக்கு செவி சாய்க்க மறுத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவையும் எடுக்கிறார்.

இந்த எண்ணத்துடன் கைகேயியின் அரண்மனைக்குச் செல்கிறார் ஜோதிடர். அரண்மனையில் ராமனின் பட்டாபிஷேகத்தால் உற்சாகம் நிரம்பி வழிகிறது. கைகேயியும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். அந்நிலையிலும், ஜோதிடரின் கலக்கமடைந்த முகத்தைக் கண்டு விடுகிறாள். அவரிடம் காரணம் கேட்கிறாள்.

தனிமையில் அவளைச் சந்தித்து, விஷயங்களை நடுக்கத்துடன் ஜோதிடர் விவரித்தார். அவளும் கேட்டுக்கொள்கிறாள். அவர் சொல்லிதான் இரண்டு வரங்கள் குறித்து அவளுக்கு நினைவு வருகிறது. அப்படியே செய்வதாக உறுதியளிக்கிறாள். தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று ஜோதிடரையும் கேட்டுக்கொள்கிறார். தன் குடும்பத்தைத் தற்கொலை முடிவில் இருந்து மாற்றியதற்காக, கைகேயியின் காலில் விழுந்து செல்கிறார் ஜோதிடர்.

இந்த எண்ணத்தில் கைகேயி இருந்தது தெரியாமல், மாந்தாரையும் தூபம் போடுகிறாள். ஆனால், கைகேயி வரம் கேட்டதற்கு அடிப்படையாக இருந்தது தாய்ப்பாசமே என்கிறது அந்த ராமாயணம்.

வெப்துனியாவைப் படிக்கவும்