எல்லாவிதமான முதுகு வலிகளுக்கும் யோகாசனம் மூலம் தீர்வு காணலாம். பவன முக்தாசனம், சுத்த வஜ்ராசனம், மர்ஜரி ஆசனம், புஜங்காசனம், வியாகராசனம், தாடாசனம், கட்டி சக்ராசனம், மகராசனம், தனுராசனம் இவை அனைத்தும் முதுகுவலியை சரிசெய்யக்கூடிய ஆசனங்கள்.
பவன முக்தாசனம்
முதலில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். வலது காலை மடக்கி முட்டிப் பகுதியை வயிற்றுக்கு அருகே கொண்டுவர வேண்டும். பிறகு, பொறுமையாக கைகளைத் தூக்கி முட்டியை இரு கைகளாலும் நன்கு அணைத்தபடி முட்டியை மார்புக்கு அருகே கொண்டுவர வேண்டும். இயன்றவரை மார்புக்கு நெருக்கமாக முட்டியைக் கொண்டுவர வேண்டும். இந்த நிலையிலேயே 10 விநாடிகள் வரை இருக்க வேண்டும். அல்லது 3 முறை பொறுமையாக மூச்சை இழுத்து விடவேண்டும். பின்னர், கைகளை மெதுவாக இறக்கிவிட்டு, காலையும் மெதுவாக இறக்க வேண்டும்.
இதேபோல இடதுகாலை உயர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு வலது - இடது கால்களை மாற்றி மாற்றி 3 முறை செய்ய வேண்டும். பிறகு இரு கால்களையும் மடித்து, இரு கைகளாலும் அணைத்தபடி, முட்டியை மார்புக்கு அருகே கொண்டுவந்து, வயிற்றில் நன்கு அழுந்துமாறு வைத்துக்கொண்டு பொறுமையாக மூச்சை இழுத்து விடவேண்டும்.