ஏமனில் உள்நாட்டுப் போர்: இந்தியர்கள் நாடு திரும்ப அறிவுரை

வியாழன், 26 மார்ச் 2015 (11:24 IST)
ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருவதால், அங்குள்ள இந்தியர்கள் நாடுதிரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 
 
ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. ஹவுதி என அழைக்கப்படுகிற ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் அங்கு அரசு படையை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர்.
 
கிளர்ச்சியாளர்கள் ஏதன் நகரை கைப்பற்றும் முனைப்புடன் தீவிரமாக போராடி வருகிறனர். அவர்கள் அங்குள்ள விமான தளம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். மேலும், அதிபர் அபெத் ராபோ மன்சூர் ஹாதியின் மாளிகை மீது அடையாளம் தெரியாத போர் விமானங்கள் ராக்கெட் வீச்சு நடத்தியுள்ளன.
 
இந்த தாக்குதலுக்கு முன்னதாக அதிபர் ஹாதி, ஹெலிகாப்டர் மூலம் சவூதி அரேபிய தூதரக அதிகாரிகளுடன் அந்த நகரிலிருந்து வெளியேறி விட்டதாகக் கூறப்படுகிறது.
 
ஏமனில் உள்நாட்டுப்போர் தீவிரமாகி வருவதால் அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் உடனே நாடு திரும்பி விடுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
 
இந்தத் தகவலை, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.
 
ஏமன் நாட்டில் பல்வேறு இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்