சவுதியில் பெண்கள் வண்டி ஓட்டும் காலம் வந்துவிட்டது: இளவரசர் தகவல்

புதன், 30 நவம்பர் 2016 (17:50 IST)
சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவது மிக அவசியமான தேவை என்று அந்நாட்டு இளவரசர் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெண்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க மறுப்பது என்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு சமமானது என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


 

 
சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனங்களை ஓட்ட சட்டப்பூர்வமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதோடு அந்நாட்டு பெண்கள் அவர்களுக்கென தனி வங்கி கணக்குகள் தொடங்குவது, கல்வி கற்பது, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது உள்ளிட்ட பல விஷயங்களில் அந்நாட்டு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது.
 
இந்நிலையில் பெண்கள் உரிமை குறித்து அந்நாட்டு இளவரசர் அல்வலீட் பின் தலால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 
 
சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவது மிக அவசியமானது. பெண்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க மறுப்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு சமமானது. இது ஒரு அவசிய தேவையாக தற்போது மாறியுள்ளது.
 
பெண்கள் வாகனங்களை இயக்க அனுமதி அளிப்பதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். என்று எழுதியுள்ளார்.
 
மேலும் அரசக் குடும்பத்தில் இருந்து பெண்களுக்கு ஆதரவாக இளவரசர் வெளியிட்டுள்ள இந்த கருத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்