எபோலா வைரஸ் நோயைத் தடுக்க 1200 கோடி நிதி வழங்குகிறது உலக வங்கி

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (13:01 IST)
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளைத் தாக்கி வரும் எபோலா வைரஸ் நோயைத் தடுக்க உலக வங்கி 1200 கோடி ரூபாய் நிதி வழங்க முடிவு செய்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியர்சா லியோன், கினியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இபோலா என்ற புதிய வகை வைரஸ் நோய் பரவி வருகிறது.

இந்த நோய் தாக்கியவர்களுக்கு காய்ச்சல், தொண்டைவலி, தலைவலி ஏற்படும். அதன் பின்னர் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு உருவாகும். அதைத் தொடர்ந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறைந்து ரத்தபோக்கு ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடும்.

இந்த நோய் தாக்கி இதுவரை 887 பேர் பலியாகி உள்ளனர். இது ஒரு உயிர்க்கொல்லி நோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே அவற்றை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் தீவிரமாக உள்ளன.

அதற்குத் தேவையான நிதி உதவியை உலக வங்கி மூலம் இபோலா நோய் தாக்கியுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளன.

இதற்கான கூட்டம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்தது. அதில் 35 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இபோலா நோய் கடுமையாக பரவிவரும் லைபீரியா, சியார்ரா லியோன், கினியா ஆகிய 3 நாடுகளுக்கு ரூ. 1200 கோடி நிதி உதவி ஒதுக்கப்படுவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

இந்தத் தகவலை உலக வங்கி தலைவர் ஜிம் யங் கிம் தெரிவித்தார். இபோலா வைரஸ் நோய் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், அதைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நிதி ஒதுக்கீடு ஒப்புதல் உலக வங்கி போர்டு குழு இயக்குனர்களின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் இந்த வார தொடக்கத்தில் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் மட்டும் இந்த நோய் தாக்குதலுக்கு 61 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்