‘பொறுக்கி’ புகழ் சுப்பிரமணியன் சுவாமி பின்வாசல் வழியாக ஓடிய பரிதாபம்: விரட்டியடித்த தமிழர்கள்!

வியாழன், 26 ஜனவரி 2017 (10:52 IST)
தமிழர்களை பொறுக்கிகள் என விமர்சித்து வரும் பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமிக்கு அமெரிக்காவில் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தமிழர்களுக்கு பயந்து அவர் பின்வாசல் வழியாக சென்றார்.


 
 
இந்தியப் பாரம்பரியமும் கலாச்சாரமும் என்ற தலைப்பில் பேசுவதற்காக சுப்ரமணியசாமி சியாட்டலுக்குக்கு வருகை தந்திருந்தார். இதனை தெரிந்துகொண்ட சியாட்டலில் உள்ள தமிழர்கள் திரண்டு சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்க குவிந்தனர்.
 
சுப்பிரமணியன் சுவாமி பேச வந்த அரங்க வாசலில் தமிழர்கள் பதாகைகளுடன் முழக்கமிட்டவாறே நின்று கொண்டிருந்தனர். மேலும் சில தமிழர்கள் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தில் பார்வையாளர்கள் போல அமர்ந்திருந்தனர். பல்வேறு வாயில்களிலும் மறியல் செய்ய தமிழர்கள் தயாராக இருந்தார்கள்.


 
 
தமிழர்களின் போராட்டத்தை கவனித்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் சுப்ரமணியசாமியை ஒரு பழைய காரில் யாருக்கும் தெரியாத வகையில் அழைத்து வந்தனர். ஆனாலும் அதனை கண்டுபிடித்த தமிழர்கள் மற்ற அனைவருக்கும் புரியும் விதமாக ஆங்கிலத்தில் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக கோஷமிட்டனர்.
 
தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக ஆங்கிலத்தில் கோஷமிட்டபடி முன்னேறினார்கள். நிலைமையை உணர்ந்த காவல்துறையினர், அவர்களிடம் என்னவென்று கேட்டார்கள். தமிழனத்தை தரக்குறைவாக பேசியவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்துள்ளோம் என்றார்கள். பின்னர் அமைதியாக போராடுங்கள் என்று கூறி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர் காவல்துறையினர்.
 
நடந்த சம்பவங்களை பார்த்து பதற்றமாக இருந்த சுப்ரமணியன் சுவாமியை எதிர்க்க அரங்க வாசலிலும் தமிழர்கள் குழுமியிருந்ததைப் பார்த்த விழாக்குழுவினர் அவரைப் பின்வாசல் வழியாக அரங்கத்திற்கு அழைத்துச் சென்றனர்.
 
சுப்ரமணியன் சுவாமி பேச ஆரம்பித்ததும் கைத்தட்டி ஆரவாரம் செய்து கவனத்தை திருப்பினார்கள். அதைப் பார்த்த சுப்ரமணியன் சுவாமியிடம், நாங்கள் தமிழர்கள், தமிழர்களை இழிவாக பேசியதைக் கண்டித்து வெளி நடப்பு செய்கிறோம். தமிழர்கள் வாழ்க, தமிழ் வாழ்க என்று முழக்கமிட்டனர்.


 
 
அதன் பின்னர் வெளியே வந்த சுப்பிரமணியன் சுவாமியிடம் ஒரு தமிழ்ப் பெண் மிகவும் ஆவேசத்துடன், தமிழர்களை எப்படி பொறுக்கி என்ற சொல்லலாம். எங்கள் தமிழக இளைஞர்களின் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் பார்த்தீர்களா? என் அண்ணன் தம்பிகளையை பொறுக்கி என்று பேச உங்களுக்கு யார் உரிமை தந்தார்கள். நாகரீகமாக பேசத் தெரியாத நீங்களா இந்தியக் கலாச்சாரம் பற்றி பேசுகிறீர்கள், என்று ஆங்கிலத்தில் முழங்கினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்