உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். பொருளாதார ரீதியாக அனைத்து நாடுகளும் சரிவை சந்தித்துள்ளன. இந்நிலையில் கொரோனா பரவலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருவதும், அதற்கு சீனா பதிலடியாக ஏதாவது பேசுவதும் தொடர்ந்து உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் இதற்கும் மேலும் சீனாவுடன் வர்த்தக உறவை தொடர முடியாது என முடிவெடுத்துள்ள அமெரிக்கா, சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களை திரும்ப வர சொல்லி மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்துள்ள அந்த மசோதாவில் ”அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்க முதலீடுகள் அவசியம். சீனாவில் இருந்து இடம்பெயருவதற்கு செலவுதான் முட்டுக்கட்டையாக இருக்கிறது. சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் பல நிறுவனங்கள் திரும்ப வர தயக்கம் காட்டுகின்றன. சீனா நம்பிக்கையற்ற பங்குதாரர் என்பதை காட்டிவிட்டது. சீனாவிலிருந்து இடம்பெயர அமெரிக்க நிறுவனங்களுக்கு ஊக்க தொகை அளிப்போம்” என கூறப்பட்டுள்ளது.
மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையை கொண்ட சீனா , அமெரிக்க நிறுவனங்கள் விற்பனை செய்ய ஒரு பெரிய இலக்காகும். அங்கிருந்து திரும்புதல் அமெரிக்க நிறுவனங்களின் லாபத்தை வெகுவாக குறைக்கும் என்பதால் நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.