ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் பக்தாதி தலைக்கு ரூ.60 கோடி பரிசு - அமெரிக்கா அறிவிப்பு

வெள்ளி, 11 ஜூலை 2014 (11:09 IST)
ஈராக்கில் அரச படைகளுடன் போர் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அல்-பக்தாதியின் தலைக்கு அமெரிக்க அரசு ரூ.60 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.
 
ஈராக்கில் சன்னி பிரிவை சேர்ந்த ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ இயக்கத்தினர் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். அங்கு மொகசூல், திக்ரித், கிர்குக், பாய்ஜரி, பலூஜா உள்ளிட்ட பல நகரங்களை அரச படைகளிடமிருந்து கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
 
அதேபோன்று சிரியாவின் பல நகரங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஈராக், சிரியாவில் பிடித்த பகுதிகளை ஒன்றிணைத்து ‘இஸ்லாமிய நாடு’ என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளனர்.
 
இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவராக அபுபக்கர் அல்–பக்தாதி இருந்து வருகிறார். இவரை தாங்கள் உருவாக்கிய இஸ்லாமிய நாட்டின் தலைவராக அதாவது ‘காலிபாத்’ ஆக நியமித்துள்ளனர்.
 
ஏற்கனவே இவர் கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது தலைக்கு ரூ.60 கோடி பரிசு வழங்குவதாக ஏற்கனவே அமெரிக்கா அறிவித்து இருந்தது. தற்போது அது இணைய தளங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
 
அவர் குறித்து தகவல் தெரிவித்தாலோ அல்லது கைது செய்து ஒப்படைத்தாலோ பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்