மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேர் பலி: நரேந்திர மோடி கண்டனம்

வெள்ளி, 18 ஜூலை 2014 (11:11 IST)
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைன் வான் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர்.

உக்ரைனில் மலேசிய விமானத்தை கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் உள்துறை அமைச்சக ஆலோசகர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அதை கிளர்ச்சியாளர்களின் தலைவர் அலெக்சாண்டர் போராடாய் மறுத்துள்ளார். உக்ரைன் விமானப்படைதான் சுட்டு வீழ்த்தியதாக ரஷிய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.

ஆனால், அதை உக்ரைன் அதிபரின் அலுவலகம் மறுத்துள்ளது. ஏற்கனவே 2 விமானங்களை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்தான், இதையும் செய்ததாக அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.

விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார்? என்பதில் உக்ரைன் அரசு–கிளர்ச்சியாளர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டியுள்ளனர். இதற்கிடையே, அந்த விமானத்தில் இருந்த பயணிகளில் பெரும்பாலானோர் டச்சு நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

விபத்துக்குள் சிக்கிய விமானத்தில் பயணம் செய்த நாட்டினர் விபரம்; டச்சு - 154 பயணிகள், ஆஸ்திரேலியா - 27 பயணிகள், மலேசியா -23  பயணிகள், இந்தோனேசியா -11 பயணிகள், பிரிட்டன் - 6 பயணிகள், ஜெர்மன் - 4 பயணிகள், பெல்ஜியம் -4 பயணிகள், பிலிப்பைன்ஸ் - 3 பயணிகள், கனடா - ஒரு பயணி, மேலும், 47 பேர் பயணம் செய்துள்ளனர் என்று ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்சம்மவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பொதுக்குழு இன்று அவசரமாக கூடுகிறது. மேலும் இந்த விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த பாதுகாப்பு கவுன்சில் முன்மொழிந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்