லட்சத்தில் இருவர் - இரண்டு தந்தைகளுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்

திங்கள், 11 மே 2015 (16:06 IST)
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் ஒரு தாய்க்குப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளுக்கு இரண்டு தந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள இளம் தம்பதியினருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. பின்னர் கணவர் தனது மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக சென்றுள்ளார். இதனால் அந்த பெண் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
 

 
அதாவது தனது கணவர் தனது குழந்தைகளையும், தன்னையும் விட்டுச் சென்று தனியாக வசிப்பதால், தனது குழந்தைகளை பராமரிக்க கணவர் தனக்கும் தனது குழந்தைகளைக்கும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரண்டு குழந்தைகளும் மரபனு பரிசோதனை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். அப்போது நடந்த சோதனையில் இரண்டு குழந்தைகளில், ஒரு குழந்தையின் டி.என்.ஏ. கணவரின் டி.என்.ஏ.வோடு ஒத்துப்போயுள்ளது. ஆனால், மற்றொரு குழந்தையின் டி.என்.ஏ. கணவரின் டி.என்.ஏ.விலிருந்து வேறுபட்டு இருந்துள்ளது.
 
பிறகு, அந்த பெண் நீதிபதியிடம், கணவருடன் உறவுகொண்ட மறு வாரத்தில், அவர் வேறு ஒருவருடன் உறவு கொண்டுள்ளார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அந்த நபர் யாரென்று தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். இதனால் நீதிபதி தீர்ப்பளித்தபோது, அவருக்கு பிறந்த ஒரு குழந்தைக்கு மட்டும் பராமரிப்பு செலவு தொகையை செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
 
இது எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘ஆணின் விந்தணுக்கள் ஐந்து நாட்கள் வரை உயிரோட்டத்துடன் இருக்கக் கூடியது. எனவே ஒரு பெண், ஒரு ஆணுடன் உறவு கொண்ட அடுத்த வாரத்தில் மற்றொரு ஆணுடன் சேர்ந்திருந்தால், இரண்டு பேரின் விந்தணுக்கள், வெவ்வேறு கரு முட்டைகளில் சேர்ந்து இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளன. 10 லட்சத்தில் ஒருவருக்குதான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்படும்’ என கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்