அமெரிக்க பத்திரிகையாளர்களைச் சுட்டவர் மரணம்

வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (06:37 IST)
அமெரிக்காவின் விர்ஜீனியாவில் நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் இருவரை சுட்டுக்கொன்றவர் தன்னைத் தானே சுட்டு, மரணமடைந்தார்.

வெஸ்டர் லீ ஃப்லானகன் என்ற 41 வயதுடைய அந்த நபர், காரில் சென்றபோது காவல்துறை அவரைத் துரத்திச் சென்று சுற்றிவளைத்தது.

டபிள்யுடிபிஜே7 தொலைக்காட்சியின் செய்தியாளரான ஆலிசன் பார்க்கரையும் அவரது ஒளிப்பதிவாளரான ஆடம் வார்டையும் துப்பாக்கியால் சுட்ட ஃப்லானகன், அதன் வீடியோ காட்சிகளையும் வலையேற்றம் செய்தார்.

இந்த நபரின் வாகனம் இன்டர்ஸ்டேட் 66 என்ற சாலையில் செல்வதைப் பார்த்த விர்ஜீனியா மாகாணக் காவல்துறை, அந்த வாகனத்தைத் துரத்திச் சென்றது.

அந்த வாகனம் சாலையோரத்தில் மோதி நின்றது.

அதிகாரிகள் அருகில் சென்று பார்த்தபோது, அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டதால் ஏற்பட்ட காயங்கள் இருந்தன. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த நபர் அங்கு உயிரிழந்தார்.

ஃப்லானகன் நடத்திய தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என காவல்துறை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்