புவி வெப்பமயமாதலில் முதலில் அழியப்போகும் நாடு: துவாலு நாட்டின் பிரதமர் உருக்கம் (படங்கள்)

புதன், 8 ஜூலை 2015 (19:49 IST)
உலகின் 4 ஆவது மிகச் சிறிய நாடான துவாலு, புவி வெப்பமயமாதலினால் முதலில் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளதென்று அந்நாட்டு பிரதமர் தனது உருக்கமான வேண்டுகோளை உலக நாடுகளிடம் பதவி செய்துள்ளார்.


 
 
பாரீஸில் வரும் டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் ஐ.நா. பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்திலான பயணத்தை உலகின் 4 ஆவது மிகச் சிறிய நாடான துவாலுவின் பிரதமர் எனிலே ஸ்போகா மேற்கொண்டுள்ளார்.
 
பசபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா மற்றும் ஹவாலிக்கு நடுவே குட்டித் தீவுகளை கொண்ட நாடு தான் துவாலு. வெறும் 10 ஆயிரம் பேருக்கான தேசமாக உள்ள துவாலு, பருவ நிலை மாற்றத்தால் உடனடியாக பாதிப்புக்குள்ளாக இருக்கும் நாடாக உள்ளது. கடல் மட்டம் இதன் நிலப்பரப்பை பரவலாக ஆக்கிரமித்துவிட்டது.
 
புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்க வேண்டும் என்ற இலக்கை, விஞ்ஞானிகளின் அறிவுறுத்தலின்படி 1.5 டிகிரி செல்சியஸாக மேலும் குறைக்க இலக்கு நிர்ணயிக்க வேண்டும் ஐரோப்பிய தலைவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் வலியுறுத்தியதாக ப்ரூசெல்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.


 
 
"இந்த உலகை காப்பாற்ற முதலில் துவாலுவை காப்பாற்றியாக வேண்டும். இந்த தீவு நீரில் மூழ்குவதோடு பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் நிற்கபோவதில்லை. அதன் பின்னர் நமது பூமி என்னவாக இருக்கப் போகிறது என்பதை உணருங்கள். மனிதர்களாகிய நாம் சக மனிதன் அழிவதை தடுத்தாக வேண்டும்.
 
புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைத்தாலும் அதன் அச்சுறுத்தல் மாறப்போவதில்லை என்று விஞ்ஞானிகள் எச்சரித்துவிட்டனர். துவாலு கடலுக்கு அடியில் செல்லும் நிலைமை வரும்போது அங்குள்ள மக்கள், உயிரினங்களை வேறு நாடுகளில் வாழ வைத்துவிட முடியும். ஆனால், அது தீர்வு இல்லையே" என்று அந்த குட்டித் தீவுகளாலான நாட்டின் பிரதமர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்