ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் துருக்கி கள்ளத்தனமாக ரூ. 5000 கோடிக்கு வர்த்தகம்

செவ்வாய், 1 டிசம்பர் 2015 (11:07 IST)
கடந்த எட்டு மாதங்களாக கருப்பு சந்தையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கச்சா எண்ணெய்யை பயங்கரவாதிகளிடமிருந்து துருக்கி வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாதிகளை எதிர்த்துக் குண்டுகளை வீச வந்த ரஷ்யப் போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது. இதற்கு இதுவரையில் துருக்கி வருத்தம் எதையும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கா தலைமையிலான ராணுவக்கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் துருக்கி, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் வெளி வந்துள்ளன.
 
இராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் சில பகுதிகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வசம் உள்ளன. அப்பகுதிகளிலிருந்து எண்ணெய் எடுக்கும் வேலையை பயங்கரவாதிகள் செய்கிறார்கள். இதை பணம் கொடுத்து துருக்கி வாங்கிக் கொள்கிறது. இதன்மூலம்தான் ஆயுதங்களை வாங்கும் பணி நடக்கிறது.
 
இது தொடர்பான பல்வேறு ஆதாரங்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது. மேலும், ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புடின், துருக்கி பயங்கரவாதிகளிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
 
இதே குற்றச்சாட்டை இராக் நாடாளுமன்ற உறுப்பினரான மோபக் அல் ருபாயே கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக வீடியோ மற்றும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
 
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இராக் மற்றும் சிரியாவிலிருந்து வாகனங்களில் எண்ணெய் எடுத்துச் செல்லப்பட்டு சர்வதேசச் சந்தையில் உள்ள விலையை விட 50 சதவிகிதம் குறைவான விலையில் துருக்கி அதை வாங்கிக் கொள்கிறது.
 
இராக் மற்றும் சிரியாவிலிருந்து கிடைக்கும் எண்ணெய்க்கு துருக்கி தரும் பணமும், டாலர்களும்தான் பயங்கரவாதிகளுக்கு ஆக்சிஜனாகும். இந்த ஆக்சிஜனைத் தடுத்து விட்டால் பயங்கரவாதிகள் மூச்சுத் திணறிவிடுவார்கள்.
 
இந்த எண்ணெய் கடத்தல் வேலைகள் அனைத்துமே துருக்கியின் ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரியும். சொல்லப்போனால், துருக்கியின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையின் பக்கத்தில் அமர்ந்தே இந்த வர்த்தகத்தை மேற்கொள்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்