1000 மீட்டர் ஆழமுடைய குகையில் சிக்கிய குகை ஆய்வாளர்

செவ்வாய், 10 ஜூன் 2014 (18:49 IST)
ஜெர்மனியின் 1000 மீட்டர் ஆழம் கொண்ட குகையில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றவர் அந்த குகையில் சிக்கியுள்ளார்.
 
குகை ஆய்வுக்காக கடந்த வார அங்கு சென்ற மூன்று பேர் அடங்கிய குழு, குகையினுள் இறங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது பாறை ஒன்று சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒருவரது தலையிலும், உடலிலும்  காயம் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் அவருக்குத் துணையாக ஒருவர் குகையிலேயே இருக்க மற்றொருவர் 12 மணி நேர முயற்சிக்குப் பின் மேலேறி வந்து உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார்.
 
இதைத் தொடர்ந்து அங்கு 200 க்கும் மேற்பட்டோர் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த குகையின் ஆழம் அதிகமாக இருப்பதால் அவர்களை மீட்க பல நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
 
குகை செங்குத்தாக இருப்பதால் அவர்களை மீட்பது மிகவும் சிக்கலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 350 மீட்டர் ஆழம்வரை இறங்குவது எளிமை என்றும், ஆனால் அதற்குப்பிறகு பாதை செங்குத்தாக இருப்பதால், கயிற்றின் மூலம்தான் இறங்க முடியும் என்றும் மீட்பு குழு அதிகாரிகளுள் ஒருவரான கிளமென்ஸ் ரெய்ண்டில் தெரிவித்துள்ளார்.
 
இவர்கள் ஸ்டட்கட்டிலிருந்து சென்ற ஆய்வாளர்கள் என்றும், இந்த ஆய்வாளர்கள்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த குகைப் பாதையை கண்டுபிடித்தவர்கள் என்றும் ஜெர்மன் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்