கணக்கு வழக்கில் முறைகேடு: சிக்கலில் டோஷிபா நிறுவனம்

செவ்வாய், 21 ஜூலை 2015 (12:07 IST)
ஜப்பானின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டோஷிபா தனது கணக்குவழக்கில் முறைகேடுகள் செய்திருந்தது இப்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சுயாதீனமானக் குழு, டோஷிபா நிறுவனம் கடந்த ஆறு ஆண்டுகளில் தனது இலாபத்தை 1.2 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கூட்டிக் காட்டியிருந்ததை கண்டறிந்துள்ளது.
 
அவ்வகையில் தெரிந்தே திட்டமிட்டு டோஷிபா தனது இலாபக் கணக்கை கூட்டிக்காட்டியது என அந்த சுயாதீனக் குழு கண்டுபிடித்துள்ளது.
 
இலாபம் கூட்டிக் காட்டப்பட்டது நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஹிஸாவ் தனாகாவுக்கும், அவருக்கு முன்னர் அப்பொறுப்பில் இருந்தவருக்கும் தெரிந்திருந்தன என்றும் அந்தக் குழு கூறுகிறது.
 
மூத்த அதிகாரிகளின் அபிலாஷைகளுக்கு எதிராக குரல் கொடுக்காமல் தவிர்க்கும் நிறுவன ரீதியிலான கலாச்சாரமும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது எனவும் அந்தக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
 
சுயாதீனக் குழுவின் அறிக்கையை அடுத்து, டோஷிபா நிறுவனத்தின் செயற்குழுவிலுள்ள பெரும்பாலானவர்கள் மாற்றப்படுக் கூடும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
 
அதேபோல் டோஷிபா நிறுவனத்தின் மீது பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஜப்பானில் நிறுவனங்கள் நிர்வகிக்கப்படும் முறையை மேம்படுத்தி, வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர நாட்டின் பிரதமர் முயற்சிகளை எடுத்துவரும் வேளையில் இந்த அறிக்கை வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்