மெக்சிகோ எல்லைக்கு அதிக துருப்புகளை அனுப்ப உள்ளது அமெரிக்கா
திங்கள், 4 பிப்ரவரி 2019 (16:48 IST)
மெக்சிகோ எல்லைக்கு மேலும் 2000 துருப்புகளை அனுப்ப உள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.இதன் மூலம் தெற்கு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புகளின் எண்ணிக்கை 4300ஆக அதிகரிக்கும்.
இந்த வீரர்கள் எல்லையை கண்காணிப்பாளர்கள் என்றும், அங்குள்ள துருப்புகளுக்கு கண்காணிப்பு பணியில் உதவுவார்கள் என்றும், எல்லையில் இரும்பு கம்பிகள் மூலம் வேலிகளை ஏற்படுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.
எல்லையில் சுவர்
எல்லையில் சுவர் கட்ட அமெரிக்க காங்கிரசிடம் அதிபர் டொனால்ட் டிரம்ப் நிதி கோரி வரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முறைகேடான குடியேற்றங்களை தடுக்க இந்த நடவடிக்கையானது உதவுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.
மெக்சிகோ எல்லைசுவருக்கான நிதி காங்கிரஸால் மறுக்கப்பட்டதையடுத்து அமெரிக்காவில் நீண்ட நாட்களுக்கு பகுதி அளவு அரசாங்க முடக்கத்தை மேற்கொண்டார் டிரம்ப். இது ஏறத்தாழ ஒரு மாதகால அளவுக்கு நீடித்தது.
ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை அடுத்து அந்த அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது. அந்த தற்காலிக ஒப்பந்தமானது வரும் பிப்ரவரி 15ஆம் தேதி உடன் நிறைவடைகிறது.
தனது கோரிக்கைகள் நிறைவேற்றபடாவிட்டால் தேசிய அவசர நிலையையோ அல்லது மற்றொரு அரசு முடக்கத்தையோ மேற்கொள்வேன் என டிரம்ப் அறிவித்திருந்தார்.
எல்லையில் ராணுவ வீரர்கள்
மெக்சிகோ எல்லை பகுதிக்கு 3750 ராணுவ வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என்று முன்பே அமெரிக்க ராணுவம் கூறி இருந்தது.
முதற்கட்டமாக கடந்த நவம்பர் மாதமே ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டார்கள்.
தெற்கு எல்லையில் எவ்வளவு துருப்புகள் தேவைப்படுமென தாங்கள் மதிப்பீடு செய்து வருவதாக பென்டகன் கூறி உள்ளது.
கடந்த வியாழக்கிழமை இது தொடர்பாக ஒரு ட்விட்டும் பகிர்ந்திருந்தார் டிரம்ப்.
அந்த ட்வீட்டில். "பெரும் பேரணியாக வந்து ஊடுருவ முயல்வோரை தடுக்க அதிகளவிலான துருப்புகள் எல்லைக்கு அனுப்பப்படும்" என அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை பகிர்ந்த ட்வீட்டிலும், "எல்லையில் சுவர் இல்லை என்றால் எல்லையில் பாதுகாப்பு இல்லை" என்று கூறி இருந்தார்.
மெக்சிகோ எல்லை பிரச்னையை ஒரு நெருக்கடி என தொடர்ந்து விவரித்து வருகிறார் டிரம்ப்.
மெக்சிகோ எல்லைக்கு ராணுவத்தை அனுப்பும் முதல் அதிபர் டிரம்ப் அல்ல.ஒபாமா 1200 தேசிய பாதுகாப்பு படையையும், புஷ் 6000 துருப்புகளையும் அனுப்பி உள்ளார்.
எல்லையில் நடப்பது என்ன?
தடுப்பு காவல் முகாமில் வைக்கப்பட்டுள்ள 9 குடியேறிகள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். அவர்களுக்கு வலுக்கட்டாயமாக உணவு வழங்கப்பட்டது என்கின்றனர் டெக்சாஸ் அதிகாரிகள்.