பாங்காக் ஆர்ப்பாட்டத்தில் பொலிசார் கண்ணீர்ப் புகை வீச்சு

வெள்ளி, 9 மே 2014 (17:48 IST)
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் மீது பொலிசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் உள்ளனர்.

அரசாங்கத்தின் பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்துக்குள் அதிரடியாக நுழைய ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்றிருந்தனர்.
 
பிரதமர் யிங்லக் ஷினாவத்ரவையும் காபினட் அந்தஸ்துடைய அமைச்சர்கள் ஒன்பது பேரையும் பதவி நீக்கி இரண்டு நாளாகும் நிலையில், இடைக்கால அரசு அகற்றப்பட வேண்டும் எனக் கோரி பாங்காக் வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலம் சென்றிருந்தனர்.
 
பிரதமரும் அமைச்சர்களும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக அரசியல் சாசன நீதிமன்றத்தால் குற்றங்காணப்பட்டு பதவிநீக்க்கம் செய்யப்பட்டிருந்தனர்.
 
அரசாங்கத்தை கலைத்துவிட்டு, திட்டமிடப்பட்டுள்ள தேர்தல்களை ஒத்திவைத்துவிட்டு அரசியல் சீர்திருத்தங்களுக்கு வழிவிட வேண்டும் எனக் கோரி தாய்லாந்தில் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்