தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பெல்ஜியத்தில் சென்னை என்ஜினீயர் மாயம்: தேடும் பணி தீவிரம்
வியாழன், 24 மார்ச் 2016 (11:21 IST)
பெல்ஜியத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றி வரும் சென்னை சாப்ட்வேர் என்ஜினீயர் காணாமல் போனார். அவரை தேடும் முயற்சி நடந்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகரில் விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.
அதில், 35 பேர் உயிரிழந்தனர். 2 இந்தியர்கள் உள்பட 200 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பிரசல்சில் பணியாற்றி வரும் சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராகவேந்திர கணேசன் என்பவர் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது.
இவர் பிரபல தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான "இன்போசிஸ்" ஊழியர் ஆவார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள இன்போசிஸ் கிளையில் அவர் 4 ஆண்டுகள் பணியாற்றினார்.
இதைத் தொடர்ந்து, பிரசல்ஸ் நகரில் ஒரு "புராஜக்ட்" பணிக்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்றார். ராகவேந்திர கணேசனுடைய மனைவி, சென்னையில் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது.
இந்த குண்டு வெடிப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, மும்பையில் வசித்து வரும் தனது தாயார் அன்னபூரணியுடன் "ஸ்கைப்" மூலம் அவர் பேசினார்.
குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, ராகவேந்திர கணேசனுடனான தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே, அவர் என்ன ஆனார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
அவரது பெயர், உயிரிழந்தவர்கள் பட்டியலிலோ, காயம் அடைந்தவர்கள் பட்டியலிலோ இல்லை. அதனால் அவர் எப்படி இருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது.
இந்நிலையில், பிரசல்ஸ் நகரில் உள்ள இந்திய தூதரகம், ராகவேந்திர கணேசனை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளுக்கும் குழுக்களை அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால் அவர் பற்றிய தகவல் எதுவும் இல்லை.
இந்நிலையில், ராகவேந்திர கணேசனை தேடி கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.