தீவிரவாதத்தை பரப்பும் நபர்களைப் பற்றி துப்பு கொடுத்தால் ரூ 10 லட்சம்: சீன அரசு அறிவிப்பு

திங்கள், 8 பிப்ரவரி 2016 (21:18 IST)
இணையதளம் மூலம் தீவிரவாதத்தை பரப்பும் நபர்களைப் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.


 

 
ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களை மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாதிகளாக மாறுவதை தடுக்க புதிய திட்டத்தை சீன அரசு நடைமுறைபடுத்தி வருகின்றது.
 
அதன்படி. ஆன்லைன் மூலம் தீவிரவாதத்தை பரப்பும் நபர்களைப் பற்றி துப்பு அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் யுவான்களை (இந்திய மதிப்பில் சுமார் 10 லட்சம் ரூபாய்) சன்மானமாக வழங்கவுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.
 
கடந்த 2015 ஆம் ஆண்டு இதுபோன்ற முக்கிய தகவல்களை அளித்த 20 ஆயிரம் பேருக்கு 20 மில்லியன் யுவான்கள் சீன அரசின் சைபர் குற்றப் பிரிவின் மூலம் வழங்கப்பட்டது. 
 
இந்த திட்டம் எதிர்காலத்தில் தொரும் என்றும் தீவிரவாதம் தொடர்பான தகவல்களின் முக்கியத்துவத்துக்கேற்ப ஒரு லட்சம் யுவான் வரை சன்மானமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள்சேர்க்கும் வகையில் சீன மொழியில் ஒரு பிரச்சார பாடல் வெளியாகியுள்ள நிலையில் சீன அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
பொதுவுடைமை அரசாகிய சீன அரசு, தங்கள் நாட்டில் தீவிரவாதம் தலையைடுக்காமல் தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை கடைபிடித்து மக்களை பாதுகாத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்