பெஷாவரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் புகைப்படத்தை வெளியிட்டது தாலிபான்

வியாழன், 18 டிசம்பர் 2014 (13:30 IST)
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவப் பள்ளியில் நடைபெற்ற கொடூரமான தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் படங்களை தாலிபான் இயக்கம் வெளியிட்டுள்ளது.
பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளிக்கூடத்திற்குள் ராணுவ சீருடையில் புகுந்த 6 தாலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டுத் தள்ளியதில் 132 மாணவ, மாணவியர் உள்பட 141 பேர் அநியாயமாக கொல்லப்பட்டனர்.
 
இந்த கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட 6 தீவிரவாதிகளையும் ராணுவத்தினர் சுட்டுக் கொன்று விட்டனர். இந்நிலையில், தாக்குதல் நடத்துவதற்கு முன் 6 பேரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தாலிபான் இயக்கம் வெளியிட்டுள்ளது. இதுபோன்ற தாக்குதல் தொடரும் என்றும் அது எச்சரித்துள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை அழிக்க அரசு போர் தொடுக்க இருப்பதாக பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
 
பெஷாவரில் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், ஒருவாரத்திற்குள் செயல்திட்டம் வகுக்கப்பட்டு, பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கை உடனடியாக தொடங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களையும் அவர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்