இந்தியாவுக்கு எதிராகச் செயல்படமாட்டோம்: இலங்கைக் கடற்படை துணைத் தலைமை தளபதி

செவ்வாய், 28 அக்டோபர் 2014 (08:00 IST)
சீனாவுடனான ராணுவ உறவை வளர்த்துக் கொள்ள, இந்திய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைளை எந்த நிலையிலும் இலங்கை மேற்கொள்ளாது என்று அந்த நாட்டு கடற்படை துணைத் தலைமைத் தளபதி ஜெயந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
 
இந்திய கடற்படைத் தலைமை தளபதி ஆர்.கே. தோவானின் அழைப்பின்பேரில் ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக டெல்லிக்கு வந்த ஜெயந்த பெரேரா, பாதுகாப்பு அமைச்சகம் அமைந்துள்ள சௌத் பிளாக் வளாகத்தில் இந்திய கடற்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
 
பின்னர் கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் ஆர்.கே. தோவானையும், பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லியையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்.
 
முன்னதாக, இலங்கையில் அதிகரித்து வரும் சீன படைகளின் ஆதிக்கம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, "இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பில் மிகச் சிறந்த நல்லுறவு நீடித்து வருகிறது.
 
இதே போல சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கை நல்லுறவை வளர்த்து வருகிறது. தெற்கு ஆசியாவில் அமைதியை விரும்பும் நாடாக இலங்கை விளங்குகிறது.
 
எங்கள் நாட்டில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருவதாகக் கூறுவதை நான் ஏற்கமாட்டேன். பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவற்றில் இந்தியாவைப் போல சீனாவும் சில துறைகளில் முதலீடுகளைச் செய்துள்ளது. அதை இலங்கை வரவேற்கிறது.
 
இலங்கை கடல் பகுதியில் சீன கடற்படைக்குச் சொந்தமான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. அவை வழக்கமாக வந்து செல்லும் பாதுகாப்பு கப்பல்கள்தான் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறோம். 
 
சீனாவுடனான உறவை வளர்த்துக் கொள்வதற்காக, இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் எந்த நிலையிலும் மேற்கொள்ள மாட்டோம்.
 
இலங்கையில் முப்பது ஆண்டுகளாக நீடித்து வந்த பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா மிகப் பெரிய பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் அளித்துள்ளது. அதற்காக இந்தியாவுக்கு இலங்கை எப்போதும் நன்றிக் கடன்பட்டுள்ளது.
 
இப்போது, எங்கள் நாட்டின் முழு கவனமும் வளர்ச்சியை நோக்கிய திட்டங்களைச் சார்ந்தே உள்ளது' என்றார் ஜெயந்த பெரேரா.

வெப்துனியாவைப் படிக்கவும்