தென் சீனக் கடலில் எண்ணெய் துரப்பணப்பணி: இந்தியா–வியட்நாம் ஒப்பந்தம், சீனா கண்டனம்

புதன், 29 அக்டோபர் 2014 (13:13 IST)
தென் சீனக் கடலில் எண்ணெய் துரப்பணப் பணிகளை மேற்கொள்ள வியட்நாமுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
 
அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள வியட்நாம் பிரதமர் டான் டங், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது சீனாவின் தெற்கு கடல் பகுதியில் இந்திய கப்பல்கள் சுதந்திரமாக சென்று வரவும், அப்பகுதியில் இயற்கை எரிவாயு எண்ணெய் வளங்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளவும் இந்தியாவுக்கு அனுமதி வழங்கும் ஒப்பந்தம் இருதரப்பினரிடையே கையெழுத்தானது.
 
ஏற்கனவே தென் சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகள் தொடர்பாக வியட்நாம் மற்றும் சீனா இடையே பிரச்னை நிலவி வரும் நிலையில், வியட்நாம் அரசு இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சகச் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “தென் சீன கடலில் சீனாவின் இறையாண்மையை பாதிக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டால் அதனை, சீனா நிச்சயமாக எதிர்க்கும்'' எனத் தெரிவித்தார்.
 
சீனாவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, வர்த்தக ரீதியான இரு நாட்டு ஒப்பந்தங்களில் தலையிட சீனாவுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்