ஆன்லைன் காதல் : 3900 கி.மீ பயணம் செய்து பெண்ணை கொலை செய்த சிறுவன்

புதன், 24 அக்டோபர் 2018 (17:04 IST)
நட்பாக பழகிவிட்டு திருமணம் செய்ய மறுத்த பெண்ணை, சிறுவன் ஒருவன் தேடிச்சென்று கொலை செய்த சம்பவம் ரஷ்யாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
ரஷ்யாவின் ஹபரோவ்ஸ்கவ் எனும் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுவன் கிரில் வொல்ஸ்கிக்கு, மாஸ்கோவை சேர்ந்த கிறிஸ்டியானா என்கிற சிறுமியுடன் ஆன்லைனில் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின் நட்பு காதலாக மாற இருவரும் வீடியோ கால் மூலம் அடிக்கடி பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர்.
 
மகனின் காதலை ஏற்றுக்கொண்ட கிரிலின் தாயார், என் மகனை திருமணம் செய்து கொள்ள உனக்கு சம்மதமா எனக்கேட்க, அதற்கு கிறிஸ்டியானா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், அந்த பெண்ணை நம்பி ஏமாற வேண்டாம் என அவர் கிரிலுக்கு அறிவுரை செய்துள்ளார்.
 
காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுத்த கிறிஸ்டியானா மீது கிரிலுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால், தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து 3900 கி.மீ தூரம் பயணம் செய்து மாஸ்கோ சென்றுள்ளார்.
 
ஒரு திருமணத்திற்காக தாயுடன் மாஸ்கோ வந்ததாக கூறி, தான் தங்கியுள்ள அறையில் வந்து சந்திக்குமாறு கிறிஸ்டியானாவை கிரில் அழைத்துள்ளார். கிறிஸ்டியானா அங்கு சென்ற போது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கிரில் வற்புறுத்தியுள்ளார். ஆனால், அப்போதும் கிறிஸ்டியானா மறுக்க, கோபத்தில் கத்தியால் குத்தி அவரை கிரில் கொலை செய்துள்ளார். அதன்பின் போலீசாரிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக அவரின் உடலை கழிவு நீர் கால்வாயில் மூழ்கடித்துள்ளார்.
 
வெளியே சென்ற கிறிஸ்டியானா வீடு திரும்பாததால், அவளின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். 2 மாதமாக விசாரணை செய்தும் கிறிஸ்டியானவை கண்டுபிடிக்க முடியாததால், அவரின் ஆன்லைன் நட்புகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கிரில் சிக்கினார். போலீசாரின் கேள்விக்கு முன்னுக்குப்பின் பதிலளித்ததால், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். எனவே, கிரிலை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்