உலகின் மிகவும் செலவுமிக்க நகரம் சிங்கப்பூர்

புதன், 4 மார்ச் 2015 (11:29 IST)
உலகின் மிகவும் செலவுமிக்க நகரமாக சிங்கப்பூரே தொடர்ந்து உள்ளது என்று ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.


 
எகனாமிஸ்ட் இண்டலெஜின்ஸ் யூனிட் எனும் அமைப்பு நடத்திய அந்த ஆய்வில் கடந்த ஓராண்டில் உலகில் மிகவும் செலவுமிக்க நகரங்களின் முதல் ஐந்து இடங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
 
அவ்வகையில் சிங்கப்பூரை அடுத்து பாரிஸ், ஆஸ்லோ, ஜூரிக் மற்றும் சிட்னி ஆகியவை செலவுமிக்க நகரங்கள் என அந்த ஆய்வு கூறுகிறது.
 
நியூயார்க் நகரின் வாழ்க்கைத் தரத்தை அடிப்படையாகக் கொண்டு உலகின் 133 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
 
உணவு, உடை, மின்சாரம், வீட்டுவரி, தொலைபேசி, இணையதளம், குடிநீர், கிழிவுநீர் போன்ற 160 செலவினங்களை ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
 
அடிப்படை மளிகைச் சாமான்களைப் பொருத்தவரையில் நியூயார்க்கைவிட சிங்கப்பூரில் விலைகள் 11% கூடுதலாக உள்ளன.
 
சிங்கப்பூர் மற்றும் சோல் நகரங்களிலேயே துணிகளின் விலை மிகவும் அதிகமாக உள்ளன. அங்கு நியூயார்க் நகரைவிட அவை 50% அதிகமான உள்ளன.
 
வாகனங்களின் விலையைப் பொருத்தவரையில் சிங்கப்பூரில் வாகன உரிமையைப் பெற்றுக் கொள்வதிலுள்ள சிக்கலான விதிமுறைகள் காரணமாக அங்கு கார்களின் விலை மிகவும் கூடுதலாக உள்ளன என்றும், அங்கு பயணக் கட்டணங்கள் நியூயார்க்கைவிட மூன்று மடங்கு கூடுதலாக உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
 
செலவு குறைந்த நகரங்கள்
 
உலகில் செலவு குறைந்த பல நகரங்கள் ஆசியாவில் உள்ளன என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
 
பெங்களூரு, மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் வாழ்க்கைச் செலவுகள் குறைந்த நகரங்களின் பட்டியலில் உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

 
வாழ்க்கைச் செலவுகள் குறைந்த நகரங்களின் பட்டியலின் முதலிடத்தில் பாகிஸ்தானின் கராச்சி நகரம் உள்ளது.
 
அதையடுத்து பெங்களூரு, வெனிசுவேலாவின் தலைநகர் கராக்காஸ், மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் உள்ளன என்று கூறும் அந்த ஆய்வறிக்கை, இந்தியாவில் பலதுறைகளில் அரச மானியங்கள், உணவு விலைகள் குறைவாக உள்ளது, சம்பள வீதங்கள் ஆகியவை குறைந்த வாழ்க்கைச் செலவினங்களுக்கு வழி செய்துள்ளன என்று மேலும் தெரிவித்துள்ளது
 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடக்கம் இந்தியாவில் காய்,கனிகளின் விலை குறைந்துள்ளதும் அங்கு வாழ்க்கைச் செலவினங்கள் குறைவாக உள்ளதற்கு ஒரு காரணம் எனவும் எகனமிஸ்ட் இண்டெலிஜென்ஸ் யூனிட்டின் அறிக்கை கூறுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்