சவுதி இளவரசர் ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை தர்மம் செய்வதாக அறிவிப்பு

வெள்ளி, 3 ஜூலை 2015 (02:07 IST)
சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால் தனது ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை தர்மம் செய்வதாக அறிவித்துள்ளார்.
 

 
சவுதி அரேபியா நாட்டின், இளவரசர்களில் ஒருவர் அல்வலித் பின்தலால் (60). இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 34ஆவது இடத்தில் உள்ளார்.
 
ஹோட்டல்கள் மற்றும் பல்வேறு தொழில்களை நடத்தி வரும் இளவரசர் அல்வலித் பின்தலால் விளையாட்டு அணிகளையும் சொந்தமாக நடத்தி வருகிறார். இவர் தனது வருமானத்தில் பெரும் பகுதியை சமூக சேவைக்காக பயன்படுத்தி வருகின்றார். சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால்-க்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது. இவை அனைத்தையும் தர்மம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
 
இது குறித்து சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-
 
நாடும், நாட்டு மக்களும் நலமுடன் வளமுடன் வாழ ஆசைப்படுகிறேன். அதற்கு என்னால் ஆன உதவிகளை செய்ய தயாரக உள்ளேன்.
 
குறிப்பாக, நாட்டில், சமூக மேம்பாடு மற்றும் பெண்கள் முன்னேற்றம், இளைஞர்கள் மேம்பாடு மற்றும் பேரிடர் நிவாரணம் போன்ற நல்ல விஷயங்களுக்காக  எனது சொத்துகள் அனைத்தையும் தர்மம் செய்ய விரும்புகிறேன். தர்மம் செய்வது குறித்து திட்டம் வகுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் பவுன்டேஷன் மாதிரி தனது அறக்கட்டளையும் செயல்படும் என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்