ராஜபக்சே நியமித்த தூதரக அதிகாரிகள் பதவி நீக்கம்

வியாழன், 22 ஜனவரி 2015 (14:13 IST)
முன்னாள் அதிபர் ராஜபக்சேவோல் வெளிநாடுகளில் நியமிக்கப்பட்ட 57 தூதரக அதிகாரிகளை பதவி நீக்கம் செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
 
முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே ஆட்சியில் தூதரக அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட 57 பேரில், இலங்கை வெளிநாட்டு சேவையில் பணியாற்றிய ஊழியர்களில் 10க்கும் குறைவான ஊழியர்களே தூதரக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். மற்ற அனைவரும் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.
 
அதில், நியூயார்க்கிற்கான தூதரக துணை பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, நிரந்தர பிரதிநிதி பாலித கோஹன, துருக்கிக்கான தூதுவர் பாரதி விஜேரத்ன, ஜப்பானுக்கான தூதுவர் வசந்த கரன்னாகொட, ஆஸ்திரேலியாவுக்கான தூதுவர் திசர சமரசிங்க, சுவிடனுக்கான தூதுவர் ஓஷிடி அழகபெரும, மாலைத்தீவுக்கான தூதுவர் டிக்சக் தேல, இத்தாலிக்கான தூதுவர் கரு ஹகவத்த, இஸ்ரேலுக்கான தூதுவர் மொனால்ட் பெரேரா, தாய்லாந்துக்கான தூதுவர் சாந்த கோட்டேகொட, சிங்கப்பூருக்கான தூதுவர் பேரியல் அஸ்ரப் ஆகியோர் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட தூதுவர்களாவர்.
 
இந்நிலையில், ராஜபக்சேவால் வெளிநாடுகளில் நியமிக்கப்பட்ட 57 தூதரக அதிகாரிகள் வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் நாடு திரும்புமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சக செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
 
இவர்களை தவிர, வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் செயலாளர்களும் திருப்பி அழைக்கப்பட உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்