39 வருட சிறை தண்டனை பெற்றவருக்கு 6 கோடி நஷ்ட ஈடு

சனி, 21 மார்ச் 2015 (19:10 IST)
அமெரிக்காவில் நீண்ட கால சிறை தண்டனை அனுபவித்த முதல் நபரான ரிக்கி ஜாக்சன் என்ற அப்பாவிக்கு நஷ்ட ஈடாக 6 கோடி ரூபாய்  பணம் கிடைத்துள்ளது.
 
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் க்ளீவ்லாந்தை சேர்ந்த ரிக்கி ஜாக்சன் தான் செய்யாத கொலைக்கு 39 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்து விட்டு, கடந்த ஆண்டு விடுதலையானார். 
 
மணியார்டர் விற்பனை செய்யும் ஒருவரை கொலை செய்ததாக கடந்த 1975 ஆம் ஆண்டு ஜாக்சன், வைலி பிரிட்ஜ்மேன் மற்றும் அவரது சகோதரர் ரோனி ஆகியோருக்கு 39 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் 12 வயதான பள்ளி  சிறுவனான எட்டி வெர்னான், மூவரும் கொலை செய்ததை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்ததை தொடர்ந்தே இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 
இவ்வாறு சாட்சியம் அளித்து ஏறத்தாழ 40 வருடங்களுக்கு பின், மனம் திறந்தார் எட்டி, ஜாக்சன் வழக்கில் கட்டுக்கதையை அவிழ்த்து பொய்யான சாட்சி கூறியதாக கூறிய எட்டி, கொலை நடந்த நேரத்தில் பள்ளி பேருந்தில் சென்று கொண்டிருந்ததாகவும், கொலை நடந்ததை தான் பார்க்கவில்லை என்றும் கூறினார்.
 
இதையடுத்து 20 வயதில் சிறை தண்டனை பெற்ற ஜாக்சன் 39 வருடங்களுக்கு பின், அதாவது தனது 59ஆவது வயதில் சிறையில் இருந்து  விடுதலையானார். அப்பாவியான ஜாக்சனுக்கு தவறாக தண்டனை அளிக்கப்பட்டுவிட்டது என்றும், அவருக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று கோரி வழக்கறிஞர் மைக்கேல் பெர்ரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 
 
அந்த வழக்கில் கடந்த வியாழனன்று தீர்ப்பளித்த நீதிபதி, ஜாக்சனுக்கு 1 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். அதாவது இந்திய ரூபாயில் 6 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடப்பட்டது.
 
இதனால் ஜாக்சன் ஆனந்தில் திளைத்தார். இது குறித்து கூறிய அவர், ”இது அற்புதமான  தீர்ப்பு. எனக்கு என்ன சொல்வது என்றே தெரிவயவில்லை. இது மிக அதிகமான தொகை” என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்