பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்; குலுங்கிய விமான நிலையம்! – மக்கள் பீதி!
வியாழன், 27 அக்டோபர் 2022 (08:16 IST)
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் அந்நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கண்ட திட்டுகள் நகரும் பகுதியில் அமைந்துள்ள தென்கிழக்கு ஆசிய நாடு பிலிப்பைன்ஸ். இதனால் ஆண்டுதோறும் அதிகமாக நிலநடுக்க பேரிடர் நிகழ்வுகளை சந்திக்கும் நாடாகவும் பிலிப்பைன்ஸ் உள்ளது.
நேற்று முன்தினம் பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கில் உள்ள லுசோன் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 11 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் அலறியடித்து வெளியேறிய மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். லாவோக்கில் உள்ள சர்வதேச விமான நிலையம் நிலநடுக்கத்தால் சேதமடைந்ததால் விமான நிலையம் மூடப்பட்டதுடன், விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான பொருள் சேதங்கள் ஏற்பட்டிருந்தாலும், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.