கர்ப்பிணிப் பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற 4 பேருக்குத் தூக்கு

வியாழன், 20 நவம்பர் 2014 (15:27 IST)
பாகிஸ்தானில் கர்ப்பிணிப் பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற 4 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
 
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் உள்ள நான்கானா சாகிப் மாவட்டத்தைச் சேர்ந்தவர், பர்ஸானா பர்வீன். இவருக்கும் மஸார் இக்பால் என்வருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் பர்ஸானா, முகமது இக்பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
 
இந்நிலையில், தனது மகளை முஹம்மது இக்பால் கடத்திச் சென்றுவிட்டதாக பர்ஸானாவின் தந்தை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதனால் காவல் துறையினர் இக்பால் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கைது செய்து லாகூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதற்கிடையில் பர்வீன் கர்ப்பமடைந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக மே மாதம் கர்ப்பிணியான தனது மனைவி பர்வீனுடன் நீதிமன்றத்திற்கு முஹம்மது இக்பால் வந்திருக்கிறார்.
 
அப்போது, பர்வீனின் தந்தை, சகோதரர், முன்னாள் கணவர் மற்றும் இரு உறவினர்கள் ஆகியோர், நீதிமன்றத்திற்கு வெளியே இருந்த செங்கற்களை வீசி, தம்பதியரின் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பர்வீன் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இது தொடர்பாக உலக நாடுகள் இந்த செயல் மனித உரிமை மீறல் என்று கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தன. இந்நிலையில், லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் கர்ப்பிணிப் பெண்ணான பர்வீனை, கல்லால் அடித்துக் கொன்ற அவரது தந்தை முஹம்மது அஸீம், சகோதரர் முகமது ஸாஹித், முன்னாள் கணவர் மஸார் இக்பால் மற்றும் அவரது உறவினர் ஆகியோருக்கு மரண தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்